சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கட்டியெழுப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் பக்கசார்பற்ற சூழல் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஜனாதிபதியின் பணிகளுக்கான அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் நிலையான கொள்கையை அமுல்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துள்ளதன் முக்கியத்துவம் இந்த அரச அதிகாரிகளின் கைது மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, எந்த அழுத்தங்களும் இன்றி சட்டத்தை அமுல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.