முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சிங்கள மக்கள்?

முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தினரும் இறந்துள்ளதால் சிங்கள மக்களையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளை என்ன செய்ய வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி தமிழர்கள் வரலாற்றை, தமிழினத்தை வேரோடு சர்வதேசமும் அன்றைய அரசும் இணைந்து மேற்கொண்ட இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் நடந்தேறியதை அனைவரும் அறிவோம்.

ஆனால் சுடுகாடாய் ஆக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த இனத்தின் வேர்கள் முளைவிட்டு துளிர் விட்டு நிற்பதை, எம் இனத்தின் வேர்களை அறுக்க நினைத்த முட்டாள்கள் பார்க்கட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது சாதாரண விடயமல்ல. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எம் இனத்தின் அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த தாயக மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்வோம்.

ஒருமித்த எங்கள் குரலை சர்வதேசத்துக்கு எடுத்துரைப்போம். 2018 தமிழ் இன அழிப்பு நாளை ஒருங்கிணைந்த வடக்கு பல்கலைக்கழக சமூகம், வட கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சம்மேளனம், முல்லைத்தீவு மாவட்ட அனைத்து கிராம அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து இந்த நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த வேளையில் கிழக்கின் தோழமைமிக்க நண்பர்களும் கிழக்குப் பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொண்டு எம தேசிய உணர்வை வெளிக்காட்ட வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

சிலர் சிங்கள இராணுவத்தினரும் இறந்துள்ளதால் சிங்கள மக்களையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளதைப் பார்க்கிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை என்ன செய்ய வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். பிரதேச வாதங்களை எம்மக்கள் மனங்களில் விதைத்து எம் இனத்தைக் கூறு போட்டு எம் மக்களை ஒற்றுமையாக விடாமல் பல நரிகள் இங்கே மிகக் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் தனியாக நினைவேந்தல் நிகழ்வு செய்யப்படத் தேவையில்லையெனக் கருதுகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் இது பற்றி நாம் ஆராயமுடியும். இப்போதைக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் செய்வதே சிறந்தது. அடுத்தவருடம் கிழக்கிலும் மேற்கொள்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு கரங்கொடுக்கும் அமைப்பான தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தேசத்தின் வேர்கள் அமைப்பின் திட்ட இணைப்பாளர் கதிர்காமத்தம்பி அஜந்தனும் கலந்து கொண்டுள்ளனர்.