மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓ.பி.எஸ் அணியும், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க அணியும் மோதிக்கொண்டிருக்கும் சூழலில், கம்பத்தில் மட்டும் அமைதிப்புறாவை பறக்கவிட்டு சங்கத்தேர்தலை சுமூகமாக முடித்திருக்கிறார்கள்.
கம்பம் பகுதியில் இருக்கும் கம்பம் உத்தமபுரம் கூட்டுறவு சங்கத்தில் (நம்பர் 118) ஓ.பி.எஸ் அணியும், டி.டி.வி தினகரன் அணியும் தங்களுக்குள் சமாதானம் பேசி நிர்வாகிகளை சரியாக பங்கிட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்த போது, ‘’கம்பம் ஆர்.ஆர் மற்றும் அவரது மகன் ஜெகதீசன் கடந்த சில நாள்களாகவே கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் அவரது மகன் பாலனுடன் மோதல் போக்கில் இருக்கிறார்கள். சமீபத்தில் சின்னமனூரில், பாலன் வைத்த பேனரை கிழித்து, அவருடன் பிரச்னை செய்தனர்.
இதனால் பன்னீர்செல்வத்திடம் நல்லபெயர் வாங்கிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.ஆர் தற்போது செய்த காரியம் மிகப்பெரியது. உத்தமபுரம் கூட்டுறவு சங்கத்தில் தேந்தெடுக்கப்பட்ட 11 பேரில் 6 பேர் ஆர்.ஆர் ஆதரவாளர்கள், மீதி 5 பேர் கம்பம் முன்னாள் நகரச் செயலாளரும், அ.ம.மு.க நிர்வாகியுமான பாலுவின் ஆதரவாளர்கள். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஓ.பி.எஸ் அணியும், டி.டி.வி தினகரன் அணியும் அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களிலும் மோதலில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்த வாரம் சின்னமனூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் டி.டி.வி ஆதரவாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. இது திட்டமிட்ட செயல் என்று கூறிய டி.டி.வி ஆதரவாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இங்கே உனக்கு 5, எனக்கு 6 என பங்கு பிரித்துக்கொண்டு கை கோர்த்து நடக்கிறார்கள். இதனால் நிர்வாகி ஆகலாம் என்று காத்திருந்த பன்னீரின் நெருங்கிய வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோல பல விசயங்களில் பன்னீருக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றனர்.
இது குறித்து ஓ.பி.எஸ் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, ‘’எல்லாவற்றையும் ஓ.பி.எஸ் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார். அவருக்கு தெரியாமல் இல்லை. நேரம் கிடைக்கும் போது கடும் நடவடிக்கை எடுப்பார்’’ என்றனர். தேனி மாவட்டத்தில் டி.டி.வி தினகரனுக்கு தான் ஆதரவு அதிகம் என்றும் டி.டி.வி தினகரன் தரப்பினருடன் பன்னீர்செல்வம் தரப்பினர் ரகசிய உறவில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுவரும் சூழலில் கம்பம் நிர்வாகிகளின் இச்செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. என்ன செய்யப்போகிறார் பன்னீர் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.