மோடிக்கு சவால் விடுத்த ராகுல்! வீடியோ

ராகுல் காந்தி

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாள்களே உள்ளன. இதனால் சமூகவலைதளங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ் எனக் கட்சியினர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ஊழல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக “கர்நாடகாவின் மோஸ்ட் வாண்டட்” என்ற தலைப்பில் 80 விநாடி ஓடக்கூடிய வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில், ரெட்டி சகோதரர்கள் குறித்து ஐந்து நிமிடம் பேசுங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து, எடியூரப்பா மீது 23 ஊழல் புகார்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் பா.ஜ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் 11 பேர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், ரூ.35,000 கோடி சுரங்க ஊழல் குறித்தும் வீடியோவில் உள்ளன.

ட்வீட்

இதையடுத்து, ராகுல்காந்தி இன்னொரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நீங்கள் அதிகமாகப் பேசி வருகிறீர்கள். உங்களின் பேச்சும் நடவடிக்கைகளும் பொருத்தமற்றதாகவே இருக்கின்றன. நீங்கள் தேர்வு செய்திருக்கும் முதல்வர் வேட்பாளர் கர்நாடகாவின் `மோஸ்ட் வாண்டட்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து என்னுடைய குற்றச்சாட்டுக்கள் குறித்து எப்போது பேசப்போகிறீர்கள், பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி கேட்டுள்ளார்.

சில நாளுக்கு முன்பு, காங்கிரஸ் சாதனைகளைப் பேப்பர் இல்லாமல் பேச முடியுமா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பேப்பர் பார்த்தும் பதிலளியுங்கள் என்று ராகுல்காந்தி வீடியோ பதிவின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.