தமிழகத்தில் மகள் நீட் தேர்வு எழுதவேண்டும் என்பதற்காக கேரளா செல்ல வேண்டும் என்பதால், தனது கம்மலை அவரின் தாய் அட்கு வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு போதுமான தேர்வு மையம் இல்லாத காரணத்தினால், தமிழக மாணவர்கள் கேரளா மற்றும் கர்நாடகாவில் தேர்வு எழுதுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
திடீரென்று இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எப்படி செல்வது? அதற்கு அதிக பணம் தேவைப்படுமே என்ற கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தாழுத்தாய்குளத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் தமிழகத்திற்குள்ளே நீட் தேர்வு எழுத இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் தற்போது இவருக்கு கேரளாவில் தேர்வு மையம் கிடைத்துள்ளது. கூலி வேலை செய்யும் இவரது குடும்பத்தினரால் உடனடியாக பணத்தை தயார் செய்ய முடியவில்லை.
இதனால் அவரின் தாயார் கவிதா தனது மகளின் கனவு எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற ஆசையில் தனது ஒரே சொத்தான தங்க கம்மலை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்துள்ளார்
பணத்தை ஏற்பாடு செய்தாலும், மொழி தெரியாத மாநிலத்தில் எவ்வாறு தன் மகள் சென்று தேர்வெழுதி திரும்புவார் என்ற அச்சமும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.