அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை இல்லாதொழிப்பதற்கும் பாரபட்சமின்றி, எவருக்கும் சலுகை அளிக்காது சட்டத்தை நடைமுறைப் டுத்துமாறு அதிகாரிகளை அரசதலைவர் பணித்துள்ளார்.
பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பன்னாட்டு குடும்ப நல சேவைகள் தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மைத்திரி பால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசியல்வாதிகள் அதிகாரிகள் கவனம்
இலஞ்சம் மற்றும் மோசடி என்பவற்றுற்கு எதிராக எதுவித பேதங்கள் இன்றியும் எந்தவொரு நபருக்கும் சலுகை அளிக்கப்படாமலும் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்தவும்.
பொதுமக்களின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளாகும் வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் செயற்படக் கூடாது. சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச சேவையிலிருந்து இலஞ்சம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
நான் அமைச்சராகச் செயற்பட்ட காலத்திலும் அரசதலைவராகப் பதவி வகித்துவரும் மூன்று வருட காலத்திலும் இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் அரச சொத்துக்களின் முறையற்ற பாவனை என்பவற்றைத் தடுப்பதற்காக எதுவித வேறுபாடுகளும் இன்றி சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
மத்திய வங்கி தொடர்பில் நியமிக்கப்பட்ட அரசதலைவர் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உரியவாறு முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்று சிறி லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசதலைவர் ஆணைக்குழுவும் எதிர்காலத்தில் மிக முக்கியமான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்தும்.
பன்னாட்டு ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எமது சுகாதார சேவையிலிருந்து இலஞ்சம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது.
எமது நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் என்று அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார துறையின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளும் சிறப்புச் சேவையைப் பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் குடும்ப நல சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு உள்ளிட்டோருக்கு அரசதலைவர் நினைவுப் பரிசில்கள் வழங்கினார்.