டிரைவர் செய்த உதவி..! கண் கலங்கி நன்றி தெரிவித்த மாணவி!

மதுரையில் ஹால்டிக்கெட் எடுத்துவர மறந்த மாணவியை காரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய கார் டிரைவருக்கு அங்கிருந்த பெற்றோர்கள் கண் கலங்கி பாராட்டு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவ – மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ – மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் மதுரை மேலூர் சூரக்குண்டையைச் சேர்ந்த அழகர்சாமி-தனலெட்சுமி என்ற தம்பதியின் மகள் டயானா நீட் தேர்வு எழுத அம்மா தனலெட்சுமியுடன் மதுரை பசுமலை செளராஸ்ட்ரா கல்லூரிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தேர்வு நுழைவு சீட்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார். இதனால் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படாத டயானா கல்லூரி வளாகத்தில் அழுதுகொண்டிறிந்தார். இதை பார்த்த டிரைவர் மணி என்பவர் அந்த மாணவிக்கு உதவி செய்யும் விதமாக அவரின் காரில் ஏற்றிக்கொண்டு டயானாவின் வீட்டிற்கு சென்று நுழைவு சீட்டை எடுத்து காரிலேயே அழைத்துவந்து தேர்வு எழுதும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்த்தார். மேலூர் சூரக்குண்டு பசுமலையில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் ஆனால் 35 நிமிடத்தில் அவரை காரில் கூட்டிச்சென்று நுழைவுச்சீட்டை எடுத்துவந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் மாணவி டயானா டிரைவர் மணிக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார். டயானாவின் அம்மா தனலெட்சுமி டிரைவருக்கு காசு கொடுத்துள்ளார் அதை கூட வாங்க மறுத்து மணி உதவி செய்தார். இதனால் அங்கிருந்த பெற்றோர்கள் கைகுலுக்கி பாரட்டினர்.