குழப்பத்தில் கொழும்பு அரசியல்! ராஜபக்சகளால் ஏற்படப்போகும் ஆபத்து!

‘அடுத்த அரையாண்டு காலப்பகுதிக்குள் ராஜபக்ஷர்களை இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் தமது தரப்பிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்’ என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு முறையான தலைமைத்துவம் நாட்டிற்கு அமையாததன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சிக்கும், நாட்டிற்கும் தற்போது நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளரையே முன்னிலைப்படுத்துவோம் எனவும், வேறு ஒருவரை முன்னிறுத்தப் போவதில்லை எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவின் இந்தக் கருத்துகள் மூலம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து செயற்படும் அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்து விடப்படுவார் என்பது தெளிவாகுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி மீண்டும் அவரையே ஜனாதிபதியாக நியமிப்போம்” என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவாரெனின் அவரை இலகுவாக தோற்கடிப்போம் எனவும், 2025 ஆம் ஆண்டு வரையிலும் நல்லாட்சி தொடரும் எனவும் ராஜித பொது மேடையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரின் கருத்துகளும் முன்னுக்குப்பின் முரண்பட்ட வகையிலேயே தோன்றுகின்றது. இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய அரசியல் நிலைமை காரணமாக கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை நியமிப்பதில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.