பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, மைலாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வத்தளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் டி. மஞ்சுவின் மரணத்திற்குப் பின்னர் திலீப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மைலாபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்தபோது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.