தமிழ் மாணவி உருவாக்கிய செயற்கை கோள்: குவியும் வாழ்த்துக்கள்

தமிழகத்தில் மாணவி உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த தம்பதி ஆல்பர்ட் குமார்-சசிகலா. இவர்களுக்கு வில்லட் ஓவியா என்ற மகள் உள்ளார்.

திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே.மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஓவியா, கடந்த 3ஆண்டுகளாக உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடைகொண்ட செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தனது உயிரை கொடுத்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, உருவாக்கியுள்ள செயற்கை கோளுக்கு அனிதா சாட் என்ற பெயரை சூட்டியுள்ளார்.

இதுகுறித்து வில்லட் ஓவியா கூறுகையில், இந்த செயற்கை கோளில், வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஸிஐன் உள்ளிட்டவற்றின் அளவுகளை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன.

செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். 15 செ.மீற்றர் க்யூப் வடிவத்தில், ஏறத்தாழ 500 கிராம் எடையுள்ள இந்த செயற்கை கோள், ஒரு கேப்சூலில் (விண்ணுக்கு எடுத்து செல்ல உதவும் கருவி) வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது.

மாணவியின் இந்த கடுமையான உழைப்பிற்கு சமூகவலைத்தளம் உட்பட பல இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.