அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்பிற்கோ இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது.
இதனால் ஈரானின் அணு சக்தி ஒப்பந்ததில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி இன்னும் 12 நாட்களில் முடிவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 1-ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
இது குறித்து நேற்று முன் தினம் ஈரான் ஜனாதிபதி ஹாசன் ரூஹானி கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், இதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்ததுடன் டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.