ரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

இரத்த தானங்கள் மூலம் இதனை பெறுபவருக்கு மட்டுமல்ல கொடுப்பவருக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இதய நோய் வரும் அபாயம் குறைகிறது

ரத்ததானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயங்கள் குறைகிறது. இரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவு அதிகரிக்கும் போது சில சமயம் அது இதய நோய்க்கு வழி வகுக்கிறது. முறையான இடைவெளியில் இரத்ததானம் செய்வதன் மூலம் இந்த இரும்புச்சத்து அதிகரிப்பு ஏற்படாமல் இதயத்தை காத்துக்கொள்ள முடியும்.

புதிய செல்கள் உருவாக்கம்

ரத்த தானம் செய்த பின் உடல் இழந்த ரத்தத்திற்கு இணையாக புது ரத்தம் உருவாவதற்காக உழைக்கிறது அதன் மூலம் நம் உடலில் புதிய செல்கள் உருவாக்கம் அதிகரிக்கும். இது நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

புற்று நோய் நம்மை அண்டாமல் காக்கிறது

இரத்த தானம் செய்வதால் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து நம் உடல் காக்கப்படுகிறது. உடலின் இரும்புச் சத்து அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ரத்த தானம் செய்வதன் மூலம் இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

இலவச மருத்துவ பரிசோதனை

ரத்த தானம் செய்கையில் நமக்கான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இரத்த தானம் செய்வதற்கு முன் எச்.ஐ.வி, ஹெப்பாட்டீஸ், சிபிலிஸ் மற்றும் மலேரியா போன்றவைகளுக்காக நமக்கு சிறிய இரத்த சோதனை செய்வதால், இந்த பரிசோதனையை நாம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், நமது உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் போன்றவையும் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்படும்.

வாழ்வை காக்கிறது

நீங்கள் ரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவரின் உயிரையும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கிறீர்கள். நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள் அது மட்டுமன்றி அதன் மூலம் அவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறீர்கள்.

எனவே நீங்கள் ரத்ததானம் கொடுப்பதன் மூலம் மனம் மட்டும் நிம்மதி அடைவதில்லை உடலும் ஆரோக்கியம் அடைகிறது.