தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி வில்லட் ஓவியா தயாரித்த ‘அனிதா சட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவி வில்லட் ஓவியா. இவர், கைலாசபுரம் பகுதியிலுள்ள ஆர்.எஸ்.கே.மேல்நிலைப் பள்ளியில் தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை முடித்துள்ளார்.
மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதியுள்ள வில்லட் ஓவியாவிற்கு, சிறுவயது முதலே அறிவியலின் மீது ஈடுபாடு அதிகம்.
இந்நிலையில், காற்று மாசுபாட்டை கணக்கிடவும், புவி வெப்பமயமாதலை கண்டறியவும் சிறிய ரக செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ளார். இந்த செயற்கைக்கோள், மெக்சிகோ நாட்டில் இருந்து இந்திய நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் ஏவப்பட்டது.
இது தொடர்பாக வில்லட் ஓவியா கூறுகையில், ‘வில்லட் ஓவியா என்றால் ‘கிராமத்து ஓவியம்’ என்று அர்த்தம். அதைதான் எனக்குப் பெயராக சூட்டியுள்ளனர் எனது பெற்றோர். சிறுவயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம்.
எனவே, எங்கள் பள்ளியில் நடக்கும் அறிவியல் போட்டிகளிலும், வெளியில் நடக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். இவ்வாறாக அறிவியல் மீது கொண்ட நாட்டத்தால் நான் சிறிய ரக செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைத்தேன்.
இந்தச் செயற்கைக்கோள், காற்று மாசுபடுதலை கணக்கிடவும், பூமி வெப்பமயமாதலை கண்டறியும் விதமாகவும் வடிவமைப்பட்டுள்ளது. அரைக்கிலோ எடையுள்ள அதனை உருவாக்கி மெக்சிகோ நாட்டிற்கு அனுப்பி வைத்தேன்.
மேலும், என்னை போல மருத்துவர் கனவில் வாழ்ந்து அந்த கனவு நிறைவேறாமல் போனதால், கடந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, எனது கண்டுபிடிப்புக்கு ‘அனிதா சாட்’ என்று பெயர் வைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.
வில்லட் ஓவியா, அறிவியலில் மட்டுமல்லாமல் வீணை மீட்டுவது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.