தண்ணீரால் உடல்நலத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக மண்பானை, செம்பு பாத்திரம் போன்றவற்றில் தண்ணீரை ஊற்றி அன்றாட தேவைகளுக்கு உபயோகிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர் நம் முன்னோர்கள்.ஆனால், நாம் வாழ்க்கை முறை மற்றும் கால மாற்றங்களால் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல பொருட்களையே பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் பெட் பாட்டில் என எச்சரிக்கிறார் பொதுநல மருத்துவர் மோகன்.
நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் பாட்டில் கலாச்சாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது.
இன்று பிளாஸ்டிக் என்பது ஒட்டு மொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதை உணர்ந்துகொள்ளாமல் பெரும்பாலானோர் தண்ணீர் கொண்டு செல்வதற்கு மட்டும் இல்லாமல், சூடான பானங்களான டீ, காபி மற்றும் பால் ஆகியவற்றை பல மணி நேரம் வைத்திருப்பதற்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பாட்டில் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிர்ப்பதே நல்லது.
வெந்நீர், சூடான சாம்பார், டீ, காபி போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களிலோ, பாட்டில்களிலோ, மற்ற பிளாஸ்டிக் பொருட்களிலோ கண்டிப்பாக எடுத்து செல்லக் கூடாது. அவ்வாறு செய்வதால், அதிக சூடு காரணமாக அதில் உள்ள வேதிப்பொருளான மீத்தேன் அமிலம் வெளிப்பட ஆரம்பிக்கும்.
இது நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தக் கூடியது. முக்கியமாக புற்றுநோய், ஹார்மோன் குறைபாடு, எலும்புகளைப் பலமிழக்க செய்தல், ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஒவ்வொன்றாக உடலில் தோன்ற ஆரம்பிக்கும். பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றின் பயன்பாட்டால் நம்முடைய உடலில் தோன்றும் பலவிதமான பாதிப்புகளின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை.
மெல்லமெல்லத்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கும். வயிற்று வலி, வாந்தி, பசி இல்லாமை ஆகியவை இதில் முக்கியமான அறிகுறிகளாகும். இவை தவிர, அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டில் போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ரத்த சோகை உண்டாகும்.
நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பொருட்களால் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளும் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. இப்பொருட்களை நாம் தவறுதலாகவோ, கவனக்குறைவாக வைக்கும்போது, அவற்றை இந்த விலங்குகள் விழுங்கும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படலாம். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பாக்ஸ் ஆகியவற்றை உபயோகிப்பதால் நமக்கு ஏற்படுகிற வயிறு தொடர்பான உபாதைகளைத் தடுப்பதற்கு முதலில் அவற்றை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மேலும், பாட்டிலின் அடிப்பகுதி, வாய்பகுதி, மூடியின் உட்புறம் ஆகியவற்றை வாரத்துக்கு ஒரு தடவையாவது கழுவ வேண்டும்.
அதன் பின்னரும் உடலில் பிரச்னைகள் வர தொடங்கினால் ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, என்ன மாதிரியான பிரச்சனை, எந்த அளவிற்கு உடலைப் பாதித்து உள்ளது என்பதற்கு ஏற்றவாறு, சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
உதாரணத்துக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகிய பிரச்சனை என்றால், பொதுநல மருத்துவரிடமும், ரத்த சோகை என்றால், ரத்த இயல் மருத்துவரிடமும் சிகிச்சை பெறலாம். பெட் பாட்டிலுக்குப் பதிலாக காப்பர் பாட்டில், எவர்சில்வர் ஃபிளாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் நல்ல வழி.