தினகரன் – திவாகரன் மோதலுக்குப் பிறகு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்தார். அப்போது, `அ.தி.மு.க-வில் உன்னை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால், நான் கட்சியைவிட்டே ஒதுங்கிவிட வேண்டும் என்றும் திவாகரன் மூலமாக ஆளும் தரப்பில் பேசுவதாகத் தெரிகிறது. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் சம்மதித்தால் என்னை விட்டுவிடுங்கள். நான் தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பார்த்துக்கொள்கிறேன்’ எனக் கூறியதாகத் தகவல் வெளியாகி சசிகலா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டி.டி.வி.தினகரனும் திவாகரனும் சில வாரங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வெளிப்படையாகவே மோதிக் கொண்டனர். ”தினகரன் வீட்டில் நிர்வாகிகள் நிற்பதற்கே பணம் வாங்கிக்கொண்டுதான் நிற்கவைக்கிற நிலை. அந்த அளவுக்கு அ.ம.மு.க-வில் பணம் வாங்கிக்கொண்டுதான் நிர்வாகிகளுக்குப் பதவி தரப்படுகிறது. கட்சியில் உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை” எனத் தினகரன் மீதும் அவர் மனைவி அனுராதா மீதும் கடுமையான விமர்சனங்களைத் திவாகரன் வைத்தார்.
”திவாகரன் உடல்நிலை பாதிக்கபட்டவர். அதனால் அவர் பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” எனத் தினகரன் பேசினார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மன்னார்குடியில் அம்மா அணியில் என்கிற பெயரில் செயல்படுவதாக்க கூறி அதற்கான கட்சி அலுவலகத்தை திறந்தார். சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். ”பிரிந்து கிடப்பவர்களைச் சேர்த்து நேரம் வரும்போது தாய் கழகத்துடன் இனைத்துக் கொள்ளப்படும்” என்றார்.
அதன் பிறகு, இரு தரப்புமே அமைதி காத்து வந்தனர். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம் எனத் திவாகரன் தரப்பில் அம்மா அணி என அச்சடிக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த ஃப்ளெக்ஸில் சில இடங்களில் திவாகரன் படம் கிழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்துள்ளார். இன்றும் தினகரன் பெங்களூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ”இருவருக்குமான மோதலைத் தொடர்ந்து சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது ஓ.பி.எஸ் தம்பி ராஜா மூலம் திவாகரனிடம் ஆளும் தரப்பில் பேசி வருகிறார்கள். உங்களை (சசிகலாவை) அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், நான் எதிலும் தலையிடக் கூடாது என இதற்கு சம்மதித்தால் சசிகலா சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பில் சொல்கிறார்களாம். இதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள். இந்தத் திட்டத்தோடுதான் திவாகரன் என்னை கடுமையாக விமர்சனம் செய்து பேசுகிறார்.
`திவாகரன் பேசி வருவதற்கு நீங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. யார் மூலமும் அவரை சமாதானம் செய்து அமைதியாக்க முயலவில்லை. நமக்குத் துரோகம் செய்தவர்களோடு மீண்டும் சேர்ந்தால், நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். நம் மீது பெரிய நெகட்டிவ் விமர்சனம் உண்டாகும். இல்லை நீங்கள் அதைதான் விரும்புகிறீர்களா’ என தினகரன் சசிகலாவிடம் கேட்டிருக்கிறார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சசிகலா, தினகரனிடம் எதையும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கிறார். `இல்லை, அதுதான் உங்கள் திட்டம் என்றால் என்னை விட்டுவிடுங்கள். நான் என்னை நம்பி வந்தவர்களோடு இப்போதுபோல் என் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை நடத்திக்கொள்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு எந்தப் பதிலையும் சசிகலா சொல்லாமல், ‘கொஞ்சம் அமைதியா இரு. இப்பதான் நமக்கான நிலைமை மாறிகிட்டு இருக்கு. மத்திய அரசின் பார்வை நம் பக்கம் திரும்பியிருக்கு. சீக்கிரமே நான் சிறையில் இருப்பதிலிருந்து கட்சி வரை அனைத்துக்கும் நல்ல விடிவு கிடைக்கப்போகிறது’ எனச் சொல்லியிருக்கிறார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத தினகரன், ‘பெரிய திட்டத்தோடுதான் எல்லாம் செயல்படுகிறார்கள். இனி நம் வழியை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’ என உடன் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். அதோடு சென்னை திரும்பாமல் அடுத்து என்ன செய்வது என முக்கியஸ்தர்களோடு அங்கேயே தங்கி ஆலோசனை செய்து வருகிறாராம்.
இது ஒருபுறம் இருக்க, திவாகரன் பக்கம் எந்த எம்.எல்.ஏ-க்களும் செல்லாத நிலையில், பெரிய ஆதரவு என யாரும் தெரிவிக்காத நிலையிலும் இன்று சென்னையில் தன்னிடம் இருப்பவர்களை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என ஆலோசனை நடத்தியிருக்கிறார். ”தினகரனுக்கு பெரிய அளவில் எழுச்சி இருக்கிறது. இனி சசிகலாவே வந்தாலும் தினகரன்தான் எல்லாம். அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் செல்வாக்கு இருப்பதாக” எனத் தினகரன் தரப்பில் பேசி வருகிறார்கள். ‘இப்போது போய் அ.தி.மு.க-வில் இணைத்தால் நம் நிலைமை என்னாவது. தன்னை நம்பி வந்தர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும். நான் நேர்மையாக இருக்கிறேன். அதனால்தான் என்னைப் பார்த்து ஆளும் கட்சியினர் பயப்படுகின்றனர்’ எனத் தினகரன் கூறியிருக்கிறார். ஒருவேளை இணைப்பு என்பது நடந்தால் சசிகலா இல்லாமலேயே தனி கட்சியுடன் தினகரன் செயல்பட முடிவெடுத்திருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.