தவறிழைத்துவிட்டார் டிரம்ப் – ஈரானின் ஆன்மீக தலைவர் தெரிவிப்பு

அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகுவது என தீர்மானித்துள்ளதன் மூலம்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறிழைத்துவிட்டார் என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள் என அவர் டிரம்பிற்கு தெரிவித்துள்ளார்.

முதல்நாளிலிருந்து நான் அமெரிக்காவை ஒருபோதும் நம்பவேண்டாம் என தெரிவித்து வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளையும் நான் நம்பவில்லை என அவர் தொலைக்காட்சி உரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உடன்படிக்கை தொடரவேண்டும் என தெரிவிக்கின்றன எனக்கு அவர்கள் மீது நம்பிக்கையில்லை என ஈரானின் ஆன்மிகத்தலைவர் தெரிவித்துள்ளார்

முன்னதாக ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை தொலைக்காட்சி உரையொன்றில் ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகும் தனது முடிவை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜே.சி.பி.ஓ. என்ற இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்கின்றது என  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடான  உடன்படிக்கையை பயங்கரமானது  ஒருதரப்பிற்கு சார்பானது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அவ்வாறான உடன்படிக்கையில் அமெரிக்கா ஒருபோதும் கைச்சாத்திட்டிருக்ககூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத உடன்படிக்கை அமெரிக்காவையும் அதன் சகாக்களையும் பாதுகாப்பதற்கு பதில் அந்த நாடுகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அதேவேளை உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஏனைய தரப்பின் மீது  எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை திட்டத்தை குறிப்பிட்ட உடன்படிக்கை கட்டுப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ள டிரம்ப் 2015 இல் நீக்கப்பட்ட ஈரானிற்கு எதிரான தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.