அண்மையில் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
தெற்கின் சில ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து, அரசாங்க உயர் அதிகாரிகள் இருவர் இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி குசுமதாச மஹானாம ஆகியோர் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கந்தளாய் சீனி நிறுவனத்திற்கு சொந்தமான இயந்திரங்கள் மற்றும் கட்டடங்களை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா லஞ்சம் கோரப்பட்டு, இதில் 20 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாடு செய்த இந்திய வர்த்தகருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் துணைப் பணிப்பாளர் நாயகமான அசித அந்தோனி, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எனக் கூறப்படும் ஜோசப் பிள்ளே என்பவர், இந்திய வர்த்தகரை சந்திக்க அவரது காரியாலயத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் தொடர்பிலான முறைப்பாட்டை செய்த இந்திய வர்த்தகரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இந்திய வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும், இந்த சம்பவம் விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி குறித்து முறைப்பாடு செய்த நடராஜா என்ற இந்திய வர்த்தகருக்கு உதவும் நோக்கில் தாம் வந்ததாகவும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் இந்த புலி உறுப்பினர், நடராஜாவின் காரியாலய வரவேற்பாளரிடம் கூறியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயங்களுக்கு தமது கட்சிக்காரர்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அரசாங்க அதிகாரிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ரியன்சி அரசகுலரட்ன தெரிவித்துள்ளார்.
தமது கட்சிகாரர்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் இவ்வாறு எவரேனும் செய்திருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கங்கள் கூறி வரும் நிலையில், இடைக்கிடை இடை இவ்வாறு புலிப் பீதிகள் தெற்கு ஊடகங்களில் தலைதூக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.