நுண்கடன் திட்டம் என்பது ஒருகுடும்ப பொருளாதாரத்தை உயர்த்த சுயதொழிலை ஏற்படுத்த பல நிறுவனங்கள் கிராமரீதியாக பலரை உள்ளடக்கி இந்தகடனை வழங்குகின்றனர்.
வடகிழக்கில் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின்னான 2009/மே/18 திகதிக்குப்பின் பல பெயர்களில் இந்த நுண்கடன் திட்ட முகவர்கள் காரியாலயம் அமைத்து பல குடும்ப பெண்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படுகின்றது ஐம்பதாயிரம் ஒருஇலட்சம் ஐந்து இலட்சம் என நுண்கடன் முகவர் நிறுவனங்கள் அவர்களுக்கு விரும்பியவர்களை ஒன்றினைத்து கடன்வழங்கப்படுகிறது.
கடனை ஆவலுடன் பெறும் எமது தமிழ் உறவுகள் வட்டியுடன் கடனை செலுத்துவதில் மிகவும் சிரமம் அடைகின்ற நிலையை வடகிழக்கு தமிழ்மக்கள் மத்தியில் காணமுடிகிறது கடந்த கால போர் சூழலால் இராணுவ கெடுபிடி உயிரிழப்பு பொருளாதார இழப்பு குடும்ப இழப்பு கணவர் பிள்ளைகள் இழப்பு என தவிக்கும் நிலையும் அன்றாடம் தொழில் செய்யமுடியாது வாழும் எம் உறவுகளும் இந்த கடனைபெற்று அதை ஒரு தொழில் முதலீட்டுக்கு அந்த கடன்தொகையை பாவிப்பதற்கு பதிலாக அந்த கடனால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதும் பெற்ற கடனுக்கான வாராந்த பணம் செலுத்தமுடியாமல் மேலும் இன்னொரு நுண்கடன் முகவரை நாடி ஏற்கனவே வட்டிக்கு எடுத்த பணத்தை செலுத்துவதும் சிலர் தம்மிடம் உள்ள நகைகளை விற்று கடன்கட்டுவதும் சிலர் கடன்கொடுத்த நுண்கடன் வெளிக்கள அறவீட்டாளர்கள் வீடுதேடிவரும்போது அவர்களை கண்டு ஓடு ஒழிப்பதையும் பரவலாக காணமுடிகிறது.
இதனால் குடும்ப தகராறு மன உளச்சல் ஏற்படுவதும் தற்கொலைசெய்வதும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த நுண்கடன் திட்டத்தில் இணைந்து கடன் பெற்ற இளம் குடும்ப பெண்கள் இதுவரை ஏழு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் அறியமுடிகிறது இதுமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல வட கிழக்கில் பல மாவட்டங்களில் இவ்வாறு சில பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.
நுண்கடன் திட்டம் பெண்களை தற்கொலைக்கு வழிவகுக்கின்றன என்ற விமர்சனம் பரவலாக முதூல் பாவனையாளர்களும் பல பொதுமக்களும் அதிகமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
உண்மையில் தனியார் நுண்கடன் திட்டத்தில் இணைந்து கடன்பெறும் குடும்ப பெண்கள் அந்த நிறுவனம் வழங்கும் கடனை மட்டுமே சிந்திக்கின்றார்களேதவிர அந்த கடனுக்கான பெரும்தொகை வட்டிப்பணம் செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஆனால் சமூர்த்தி வங்கியில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல வடகிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் பாரிய கோடிக்கணக்கான சமூர்த்தி பயனாளிகளின் பணம் வங்கியில் முடங்கிக்கிடக்கின்றன சமூர்த்தி திட்டத்தால் குறைந்தவட்டியில் வாழ்வாதார கடன் சதுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டாலும் அந்த கடனை பெறுவதில் எமது மக்கள் அதிகம் அக்கறை காட்டுவதில்லை இதற்கான காரணத்தை ஆராயும்போது தனியார் நுண்கடன் முகவர் நிறுவனங்கள் பயனாளிகளுக்கு பிணையாளர்களை அந்த ஊரில் ஐந்து ஆறுபேரை இணைத்து அவர்களுக்குள்ளே ஆள் மாறி பிணையாளர்களாகவும் கடன்பெறுநர்களாகவும் இலகு படுத்தி கடனை தமது வீட்டு வாசலில் வந்து வழங்கிசெல்வதால் அதிக மக்கள் இந்த நுண்கடன் திட்டத்தில் ஈர்கப்படுகின்ளனர்.
சமூர்த்தி வங்கி அரச பிரமாணங்களுக்கு உட்பட்டது “சுவாமிவரம்கொடுத்தாலும் பூசாரி வரம்கொடுப்பதில்லை” என்பது போல் எமது பகுதிகளில் சில அதிகாரிகள் சமுர்த்தி பயனாளர்களுக்கு இலகு கடன் வசதிகள் பற்றிய பூரண தகவல்களை தெரிவிக்காமல் ஏனோ தானோ என்ற மனப்பாங குடனும் கடமை புரிவதும் இல்லாமல் இல்லை.
இதைவிட இன்னும் சில அரசவங்கிகள் தனியார் வங்கிகள் பல்வேறு சுயதொழிலை ஏற்படுத்த பாரிய கடன் தொகையை வழங்கியபோதும் அதற்கான வங்கிநடைமுறை வங்கிகணக்கு எல்லோருக்கும் பொருத்தமானதாக இல்லை.
ஆனால் இலகுவாக பெறக்கூடிய கடனாக நுண்கடன் திட்டம் உள்ளதால் அதை சரிவர கடன்பெறும் எமது மக்கள் கடனை பெற்று மீள் செலுத்தமுடியாமல் தற்கொலைபுரியும் இந்த பரிதாபத்தை எவ்வாறு எமது மக்களிடம் இருந்து விழிப்பூட்ட வேண்டும் என்பதே நாம் எல்லோரும் சிந்திக்கவேண்டும்.
நுண்கடன் தொல்லையால்தான் தற்கொலை என்றால் அதற்கு தீர்வு நுண்கடனை வழங்காமல் தடுப்பதா அல்லது நுண்கடன் பெறுவோரை மனஅழுத்தங்களில் இருந்து விழிப்பூட்டுவதா அல்லது கடன் பெறாமல் சுயதொழில் செய்வதற்கான வழிமுறைகளை தேடுவதா எதைசெய்யலாம் எப்படி செய்யலாம் என்பதற்கு எவருக்குமே விடையில்லை.
தற்கொலைசெய்யும் மன அழுத்தம் கடந்த 2009/மே/18,ம் திகதிக்கு முன் வடகிழக்கு தாயகத்தில் அதிகளவில் இருக்கவில்லை விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் 70,வீதமான நிலப்பரப்பை தன்னகத்தே வைத்து ஒரு நடைமுறை அரசை ஏற்படுத்திய அந்தக்காலத்தில் ஒழுக்கம்,தன்னடக்கம்,தன்னம்பிக்கை, தத்துணிவு, வடகிழக்கு தமிழ்மக்கள் மத்தியில் எல்லோரிடமும் இருந்து மனஅழுத்தம் முற்கோவம் என்பன இல்லாத சமூகமாகவே எங்கும் காட்சியளித்தது தற்கொலைக்கு யாருமே செல்லவில்லை மாணவர்கள் இடையே ஒழுக்கம் மேலோங்கி காணப்பட்டது இன்று எம்மத்தியில் பரவலாக காணப்படும் நுண்கடன் திட்டங்கள் எதுவுமே இருக்கவில்லை ஏன் முகநூல் பாவனைகூட அப்போது எம்மத்தியில்இல்லை ஒருகட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையும் பெரியோரை கனம் பண்ணும் குணமும் இளைஞர் மத்தியில் மேலோங்கி காணப்பட்டது.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டு விடுதலைப்புலிகள் மௌனத்திற்குப்பின்பே எமது தாயகத்தில் பல்வேறு ஒழுக்கசீர்கேடுகள் போதைவஷ்த்து பாவனை மதுபான பாவனை என்பவற்றுடன் வாள்வெட்டுக்கள் தற்கொலைசம்பவங்கள் தீய செயல்பாடுகள் அதிகரித்ததுடன் மன அழுத்தம் சகல மட்ட வயதினர்களுக்கும் உள்ளது இந்த மனஅழுத்தம் வாழ்க்கையில் வெறுப்பை தூண்டி தற்கொலைகளுக்கு எடுத்துச்செல்கிறது.
இதன் பின்னணிகளை நோக்கும் போது வடகிழக்கு இளைஞர்களை தமிழ்தேசிய சிந்தனையில் இருந்து விலக்கிச்செல்லும் செயல்பாடுகளுக்கு அரசாங்கமும் ஏதோஒரு வகையில் உடந்தையாக இருக்கின்றது என்பதையும் நாம் மறுதலிக்கமுடியாது.
ஒட்டுமொத்தமாக நாம் கடந்த 2009/மே/18,க்கு முந்திய காலத்துடன் தற்போதய ஒன்பது வருடங்களை ஒப்பிட்டுபார்க்கும்போது சமூகசீர்கேடுகளும் மன அழுத்தங்களும் அதிகரிகரித்துள்ளது இதனால் தற்கொலைவீதம் கூறியுள்ளது என்பது உண்மை.
இதன் தாக்கத்தை சமூகத்தில் இல்லாமல் செய்வதற்கு சமூகவிழிப்பூட்டல்களும் சமய விழிப்பூட்டல்களும் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அவசியமாக அனைத்து சமூக நலனோம்பு அமைப்புக்கள் முன்எடுக்க வேண்டும்.
அதில் நுண்கடன் திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் தமது கடன் தொகையை அறவீடு செய்யும்போதும் கடன் வழங்கும்போதும் மக்களுக்கு மன அழுத்தங்களை பிரயோகிக்காமல் தவணைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நல்ல ஆலோசனைகளை கூறி கடன் பெறும் நபர்களைகண்டிப்பதை தவிர்த்து அன்புடன் அரவணைக்கும் மனப்பாங்கை வளர்க வேண்டும்.
தற்கொலை ஏற்பட காரணம் நுண்கடன் திட்டமே என்ற மனப்பாங்கு தற்போது சமூக மட்டத்தில் அதிகமாக பரப்பப்படுகிறது அல்லது பரவிவிட்டது இந்த கருத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் மக்களை தெளிவுபடுத்தும் கருத்துட்டங்களையும் செயல்பாடுகளையும் உடனடியாக எல்லா மாவட்டங்களிலும் கிராமங்கள் தோறும் கொண்டுசெல்ல வேண்டும்.
அப்படி செய்யத் தவறினால் காலப்போக்கில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை மக்கள் தமது பகுதியில் இருந்து விரட்டியடிக்கும் நிலை ஏற்படும்.
தொடர்ந்து மக்களுக்கு நுன்கடன் நிறுவனங்கள் சேவை செய்யும் எண்ணம் இருந்தால் கடன் தொகையை வழங்குவது மட்டும் தமது கடமை என்பதைவிட்டு மக்களை மன அழுத்தத்தில் இருந்தும் தற்கொலை முயற்சியில் இருந்தும் பாதுகாக்ககூடிய விழுப்பூட்டல்களும் தேவை என்பதை உணர்ந்தால் நல்லது.
-பா.அரியநேத்திரன்-