அரசாங்கத்திற்கான புதிய அச்சுறுத்தலாக கோட்டாபய ராஜபக்ஷ விளங்கிவருவதால், அவரை கைது செய்வதற்கு புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அண்மைய நாட்களில் கோட்டாபயவை எண்ணியே அரசாங்கம் மிகுந்த அச்சம் கொண்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால், தமது நிலை என்ன என்பதை எண்ணி அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதனால் அவரை சிறைக்குள் தள்ள முயற்சித்து வருகின்றனர். கடந்த மூன்றாண்டு காலமாக இந்த முயற்சி தொடர்ந்தாலும் ஒன்றும் கைக்கூடவில்லை.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொடவின் வழக்குடன், கோட்டாவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் எக்னொலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரை வரவழைத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறும், ஆனால், இதனை கோட்டாபயவின் அழுத்தத்தின் பேரிலேயே மேற்கொண்டதாக வாக்குமூலம் வழங்குமாறும் இராணுவ புலனாய்வு தலைவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு அறிய கிடைத்துள்ளது.
இது உண்மையாகும் பட்சத்தில், அரசியலுக்கு அடிபணிந்து போகும் இராணுவ புலனாய்வு தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.