இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் கல்வி அமைச்சினால் இலவசமாக காப்புறுதி செய்யப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் திடீர் விபத்து காப்புறுதித் திட்டத்தின் கீழ் இவ்வாறான நன்மைகளை தற்போது பெற்றுக்கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0113 641555 என்ற இலக்கத்தில் கல்வி அமைச்சையோ அல்லது 0112 357357 என்ற இலக்கத்தில் ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நிறுவனத்தையோ தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசேட காப்புறுதித் திட்டத்தை இந்த நாட்டின் மிகப்பெரிய தேசிய காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் செயற்படுத்துகின்றது.
சுரக்ஷா என அழைக்கப்படும் இந்தக் காப்புறுதி திட்டத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோரும் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.
இதற்கு விசேட பதிவுகள் அவசியமில்லை எனவும் பாடசாலையில் கொடுக்கப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம் காப்புறுதிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா வரை வைத்தியசாலை சிகிச்சைக்காக காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றால் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா வீதம் 30 நாட்களுக்கு கொடுப்பனவு இந்தக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் விபத்துக்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு ஒரு இலட்ச ரூபாயும், பெற்றோர் திடீர் விபத்தில் உயிரிழந்தால் 75 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்புறுதித் திட்டத்தினால் 4.5 மில்லியன் மாணவ, மாணவிகள் நன்மையடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசாங்க, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்விகற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிரிவெனாவில் கல்விகற்கும் பிக்கு மாணவர்களும் இந்தத் திட்டத்தில் காப்புறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.