ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி உருண்டையை சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை அப்படியே விழுங்க வேண்டும். இதனால் ராகி உருண்டையை சாப்பிட பலர் தவிர்ப்பார்கள். ஆனால் இந்த ராகி உருண்டையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

அதிலும் இதில் கால்சியம் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த ராகி உருண்டையானது கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

இங்கு ராகி உருண்டையை அதிகம் உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எடையை குறைக்க உதவும்

தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், தினமும் காலையில் ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளான ட்ரிப்டோஃபன், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.

எலும்புகளுக்கு நல்லது

ராகி உருண்டையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்புகள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு…

நீரிழிவு நோய் இருக்கிறதா? அப்படியானால் அத்தகையவர்களுக்கு ராகி உருண்டை மிகவும் நல்லது. ஏனெனில் இது நீரிழிவு நோய் முற்றுவதை தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

ராகியில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அமினோ ஆசிட்டுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.

இரத்த சோகை

ராகியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

ரிலாக்ஸ் அடைய செய்யும்

ராகி உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் தன்மை கொண்டது. எனவே வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்கள், இதனை உட்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும்

கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

வலிiமைக்கு…

உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இதில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

மலச்சிக்கலைத் தடுக்கும்

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், ராகி உருண்டையை தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தைராய்டு

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், ராகி உருண்டையை உட்கொள்வது நல்லது.

புதிய தாய்மார்களுக்கு…

புதிய தாய்மார்களின் உடலில் சிவப்பணுக்களின் அளவை அதிரிக்கவும், பால் சுரப்பின் அளவை அதிகரிக்கவும், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும்.