சேலம் கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சிறுமி மீனாவை இன்று அதிகாலை கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த அழகேசன்- கஸ்தூரி தம்பதி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர். இவர்களுக்கு ஒரே மகள் மீனா (வயது 17). இவர் தனது அம்மா வழி தாத்தா, பாட்டி வீடான மல்லூரில் வசித்து வந்துள்ளார். பின்பு மல்லூரியில் இருந்த சிறுமி மீனா, கடந்த 3 மாதத்துக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டி அப்பா வழி தாத்தா, பாட்டியான குப்புசாமி, தீர்த்தம்மாள் ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுடன் மீனாவின் சித்தப்பா வீராசாமி (வயது 45) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மீனாவின் தாத்தாவும், பாட்டியும் கூலி வேலைக்குச் சென்று விட்டார்கள்.
அதன் பிறகு வெகு நேரமாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்த பொழுது மீனா கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை (பொறுப்பு) அக்கம் பக்கத்திலும், மீனாவின் தாத்தா, பாட்டியிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் மீனாவின் பாட்டி தீர்த்தம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், வீராசாமி சிறுமியைக் கடந்த நான்கு நாள்களாகப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். வீராசாமி சம்பவ இடத்தில் இல்லாததால் அவர் மீது சந்தேகம் வலுத்து வருகிறது. உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு சிறுமி மீனாவின் மரணத்துக்கான காரணம் பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.