வவுனியாவில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

வவுனியாவில் நேற்று பிற்பகல் வேளையில் பாடசாலைக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென்று கட்டப்பட்ட தூண் இரண்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பாடசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு வவுனியா ஸ்ரீ குணானந்த ஆரம்பப்பாடசாலைக்கான புதிய வகுப்பறைக்கட்டிடம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட ஒரு பகுதிக்கான தூண் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் வேளையில் திடீரென்று நிறுத்தப்பட்ட தூண் இரண்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அத்துடன் நிறுத்தப்பட்டு தூணுக்கு அத்திவாரம் இடப்படும் அடிப்பகுதியிலிருந்து கம்பிகள் அமைக்கப்பட்டு கட்டடவேலைகள் இடம்பெற்றிருக்கவில்லை இடைநடுவில் கம்பிகள் இணைக்கப்பட்டு பொருத்தி வைக்கப்பட்டு கட்டடப்பணிகள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் பாரத்தினாலேயே தூண் திடீரென்று பாரம் தாங்க முடியாமல் வீழ்ந்துள்ளது.

இதையடுத்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கட்டட பொறியியலாளரிடம் தொடர்பு கொண்டபோது,

குறித்த பாடசாலை வகுப்பறைக்கான கட்டடம் நிர்மானிக்கும்போது குறித்த தூணிற்கு கம்பிகள் வைப்பதற்கு திட்டத்தில் தெரிவித்திருக்கவில்லை எனினும் இடையில் கம்பிகள் வைத்து கொங்கிறீட் அமைக்கப்பட்டபோது பாரம் தாங்க முடியாமல் அதற்கு அணைக்கப்பட்டிருந்த பலகைகளின் பாரத்தினால் வீழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று வீழ்ந்த வகுப்பறைக்கான புதிய கட்டடத்தின் தூண் அவசர அவரசமாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன் இன்று அமைக்கப்பட்ட தூணிற்கு அத்திவாரம் இடப்படும் அடியிலிருந்து கம்பிகள் அணைக்கப்பட்டு தூண் நிறுத்தப்பட்டுள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கட்டட பொறியியலாளரிடம் குறித்த பாடசாலைக்கான வகுப்பறையின் வரைபடத்தினைக்காண்பிக்குமாறு கோரியபோது அதனை காட்டுவதற்கு மறுத்துள்ளதுடன் இவ்வாறான கட்டடம் ஒன்று ஏற்கனவே குறித்த வவுனியா தெற்கு கல்வி வலய கட்டட பொறியியலாளரின் மேற்பார்வையில் செக்கட்டிப்புலவு பாடசாலைக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலைக்கான வகுப்பறை அமைக்கும்போது அதன் தன்மைகள் தரமான பொருட்கள் கட்டடத்தின் தன்மை என்பன பரிசீலிக்கப்படுவதுடன் அதன் பின்னர் வரைபடம் அமைக்கப்பட்டு சீமெந்தின் அளவுகள், கம்பிகளின் வலுக்கள் என்பன வரைபடத்தில் காண்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். கட்டடம் நிர்மானிக்கும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் மேற்கொள்வதுடன் அதற்கான செலவுகளும் தெரிவிக்கப்பட்டு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு கட்டடப்பணிகள் ஆரம்பிக்கப்படுவது வழக்கம் அவ்வாறு மேற்கொள்ளும் அரச திணைக்களம் ஒன்றின் பாடசாலை வகுப்பறைக்கட்டடம் திடீரென்று இடிந்து வீழ்ந்துள்ளது பல கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

எனவே இன்று திடீரென இடிந்து வீழ்ந்ததுபோல இனிவரும் காலங்களிலும் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் இடம்பெறாமல் இருக்க தற்போது அமைக்கப்படும் கட்டடப்பணிகளை நிறுத்தி மீள் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு புதிய பொறியியலாளரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் ஊழல் மோசடிகளை இனங்கண்டு அதற்குரிய தண்டனைகளை உயரதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரி வருகின்றனர்.‌