“மே 18 நினைவு நாள் – முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகளை வடக்கு மாகாணசபையே நடத்தப்போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது ஏற்பாட்டில் கலந்து கொள்ளலாம்.
இதற்கான கலந்துரையாடல் 09.05.2018 காலை 11 மணிக்கு தன்னுடைய செயலகத்தில் (முதலமைச்சரின் செயலகத்தில்) நடைபெறும்” என்று அறிவித்திருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
இதன்மூலம் கடந்த ஆண்டுகளைப் போல முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரலுக்குத் தானே தலைமை ஏற்க விரும்புகிறார். இதன் அர்த்தம், இந்த நிகழ்வைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வருவதாகும்.
கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலின்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகியிருந்தன. “வேண்டத்தகாதவர்கள் எல்லாம் ஏனிந்த நிகழ்வுக்கு வந்தார்கள்?” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பொங்கியெழுந்திருந்தனர்.
அது நேரடியாகக் கூட்டமைப்பினருக்கு எதிரான நடவடிக்கை. குறிப்பாக சம்மந்தனுக்கு எதிரானது.
அதனைத் தொடர்ந்து பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. நினைவு கூரலை அரசியல் ரீதியாகப் பார்க்கவோ அணுகவோ நடத்தவோ கூடாது என்ற கருத்துகளும் கவலைகளும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.
இருந்தபோதும் இந்த ஆண்டும் அரசியல் ரீதியாகவே நினைவு கூரலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வளவுக்கும் முள்ளிவாய்கால் நிகழ்வை அனுஷ்டிக்க முண்டியடிக்கும் தலைவர்கள், தானைத் தளபதிகள் எவரும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்களோ அந்தக் களத்தின் நெருக்கடியை அனுபவித்தவர்களோ அங்கே தங்களின் உறவுகளை இழந்தவர்களோ இல்லை.
ஆனாலும் துயரப்படுவோருக்கும் இழப்புகளைச் சந்தித்தோருக்கும் தாமே தலைவர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்த முயல்கின்றனர். அங்கே சிந்தப்படும் கண்ணீருக்குள்ளே தமக்கான அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.
இந்த ஆண்டும் இதுதான் கதை.
இவ்வாறுதான் மாவீரர்நாள் நிகழ்வுகளையும் சில அரசியல்வாதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
பிரபாகரனைப்போல “அலங்காரக் காட்சி” கூடக் கொடுத்திருந்தனர். அதாவது “மாதிரிப் பிரபாகரனாக”.
ஆனால், மக்கள் அதனை ஏற்கவில்லை. மக்களுடைய கூட்டுத்தீர்மானமும் எதிர்ப்பும் அடுத்த ஆண்டு (கடந்த ஆண்டு) அரசியல் பிரதிநிகள் பார்வையாளர்களாக நிற்க, மக்களே மாவீரர்நாள் நினைவு கூரலைச் செய்யும் அளவுக்கு பலமடைந்திருந்தது.
இதற்கான தூண்டற் பொறியை உருவாக்கியவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பஸீர் காக்காவே.
“மாவீரர் நாள் நிகழ்வுகளையும் நினைவு கூரலையும் அரசியல் தலையீடற்ற முறையில், மக்களின் தலைமையில் நடத்த வேண்டும். இதைப் புரிந்து கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
தற்போது உருவாகியுள்ள “முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்” சூழலும் ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அதாவது அரசியல்வாதிகளை நீக்கி விட்டு, மக்கள் கையேற்பதற்கான அவசியத்தை. இதைப்பற்றி மக்கள் அமைப்புகள் சில கலந்தாலோசித்து வருவதாகத் தெரிகிறது.
முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலுக்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்குவது என்பது முற்று முழுதாகவே அரசியல் ரீதியானது. விக்கினேஸ்வரனின் அல்லது அவர் தலைதாங்கும் அல்லது ஆதரவளிக்கும் (எதிர்கால) அரசியலின் நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் விதமான ஒரு நடவடிக்கையே இது.
இதை அவரோ அவருக்கு ஆதரவளிப்போரோ மறுக்கவும் மறைக்கவும் முற்படலாம். ஆனால், அது முடியாதது.
விக்கினேஸ்வரனுடைய இந்த முயற்சிகளுக்கு குழப்பங்களும் எதிர்ப்புகளும் வரலாம் என்பதால் அவர் இந்த நிகழ்வில் மாகாணசபையுடன் ஏனையோரும் இணைந்து கொள்ளலாம் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது கூடத் தந்திரமான ஒரு பொறியே.
1. மாகாணசபையுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் நல்லுறவில் இல்லை. எனவே கூட்டமைப்பின் தலைமையை இந்த நிகழ்விலிருந்து அப்புறப்படுத்தி விடலாம். அல்லது அவர்கள் இன்னொரு இடத்தில் நிகழ்வை நடத்த வேண்டும். நினைவு கூரலைச் செய்ய வேணும்.
2. மாகாணசபையின் அழைப்பை கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் ஏற்கிறார்களா இல்லையா – தன்னுடன் நல்லுறவில் இருக்கிறார்களா இல்லையா என்பதையும் அளவிட்டுக் கொள்ளலாம்.
3. தான் முந்திக்கொண்டால், கூட்டமைப்பினர் நடத்தும் நிகழ்வுக்கு அல்லது வேறு தரப்பினர் நடத்தும் நினைவு கூரலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகவே மற்றவர்களின் குடைக்குக் கீழே தான் நிற்க வேண்டியிருக்காது. பதிலாக ஏனையவர்களைத் தனது குடைக்குள்ளே கொண்டு வந்து விடலாம்.
4. மாகாணசபையின் நிர்வாகக் குறைபாடுகளை மறைப்பதற்கு இந்த நினைவு கூரலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. எதிர்கால அரசியலுக்கான அடையாளத்தை – மக்கள் துயரத்துடனும் மக்களின் உணர்வுடனும் தான் ஒன்றித்து நிற்கிறேன் என்று காட்டுவதன் மூலமாக – உருவாக்கிக் கொள்ளலாம்.
இப்படி பல விதமான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கணக்கு வைத்துக் காய்களை நகர்த்துகிறார் விக்கினேஸ்வரன்.
ஆனால், இது நிச்சயமாக அரசியல் பேதங்கள், குழப்பங்கள், பிரச்சினைகளில்தான் போய் முடியும் என வெளியே பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதைக் குறித்து பகிரங்கமாகவே கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் விக்கினேஸ்வரன் மசியவில்லை. முன்வைத்த காலில் மேலும் மூன்றடிகள் பாய்வதற்கே முயற்சிக்கிறார்.
இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (09.05.2018) காலை ஏற்பாட்டுக்குழுவுக்கான கூட்ட ஏற்பாடுகள் முதலமைச்சரின் அலுவலகத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
விக்கினேஸ்வரனுடைய இந்த நடவடிக்கை உள்ளே அரசியல் முரண்பாடுகள், இடைவெளிகளை உருவாக்குவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மாகாணசபையின் மீதான நெருக்கடிகளை உருவாக்கவும் கூடியது.
மாகாணசபையானது இலங்கை அரசின் யாப்பு மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டது என்பதால், அவற்றின் மூலமாக அரசாங்கம் மாகாணசபையின் மீதான இறுக்கங்களை எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடும்.
தற்போது உடனடியாக சட்டத்தைப் பிரயோகித்தோ அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்தோ விடயத்தைப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டு, தனக்கு வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில் மாகாணசபைகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் யாப்பை அல்லது சட்டமூலத்தை நிறைவேற்றலாம்.
இத்தகைய குணவியல்புடன்தான் அரசு செயற்பட்டு வந்துள்ளது. இதற்கு வாய்ப்பளிக்கும் விதமாகவே விக்கினேஸ்வரனும் நடந்து கொள்கிறார்.
மக்களை நினைவு கூரலைச் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கலாம். அதை மீறி அரசாங்கம் மக்களின் மீது கைவைத்தால் அது மக்கள் விரோதமாகவே மாறும்.
இதுவோ மாகாணசபைக்கு மட்டுமே எதிரானதாக இருக்கும். மட்டுமல்ல, ஏனைய எட்டு மாகாணசபைகளும் அரசின் திட்டத்தோடும் தீர்மானத்தோடும் ஒத்துப் போனால், வடமாகாணசபை மட்டும் தனித்து ஒன்றுமே செய்ய முடியாது.
மாகாணசபையின் அதிகாரத்தைக் கூட்டி அதை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதற்கிருக்கும் வலுவைக் குறைக்கும் நடவடிக்கையையே அரசியல் வரலாறும் சட்டமும் தெரிந்த நீதியரசர் (முதலமைச்சர்) செய்யத்துடிக்கிறார்.
இது யாருக்குச் சேவகம் செய்வதாகப் போய் முடியும்?
தமிழ் அரசியல் தலைமைகள் பல சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் அரசுக்குச் சவால் விடுவதாகவும் சொல்லிக் கொண்டு, அரசுக்கு வாய்ப்புகளை அளித்ததே வரலாறு.
இதில் விக்கினேஸ்வரனும் இணைந்து கொள்கிறார் – புதிய சேவகனாக.
எல்லோரும் கூடி அழுது, புலம்பிப் படமெடுத்து புகழ் பரப்பிச் செல்லவே விரும்புகிறார்கள். இழப்புகளைச் சந்தித்தோர் அதிலிருந்து மீள முடியாமல் ஆணடுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
“எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் விழுந்த இடத்திலிருந்தே எழுவோம்” என்று எழுவதற்கான அரசியலைத் தொடங்குவது யார்? அவர்களையே காலம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் அவர்களுக்கான ஒரு களமாகும்.
இல்லையெனில் 2009 இல் முள்ளிவாய்க்காலும் தமிழ்ச்சனங்களும் இருந்த நிலையையும் விட மோசமான நிலைக்குள்ளேதான் தமிழ் மக்களின் நிகழ்கால – எதிர்கால அரசியலும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான் அமையும்.
மூன்றாவது கண் கொண்டு வருக. முள்ளிவாய்க்காலில் அந்தக் கண்ணே சுடரவேணும்.
– கருணாகரன்