போதைபொருள் பாவனை தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து குடும்பங்களில் பிரிவினையையும், பாடசாலை மாணவர்களில் நெறி பிறழ்வை தோற்றுவிக்கின்றது என நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேசசபையின் அமர்வு இன்று காலை பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் தாவிசாளர் த.கலையரசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
போதைப்பொருள் பாவனை என்பது எமது தமிழ் சமூகத்தில் தேவையற்ற உயிரிழப்புகளையும், சமூக சீர்கேடுகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது. அதனை இனியும் அனுமதிக்க முடியாது.
எனவே இனிமேல் எமது பிரதேத்தில் கடைகளில் புகையிலை மற்றும் புகையிலை சார் உற்பத்தி விற்பனையை நிறுத்த எமது மக்களின் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் பாவனை ஏழை மக்களின் வாழ்வினை சிதைக்கின்ற கருவிகளாக செயற்படுவது மட்டுமல்லாது தினக் கூலி பெறும் குடும்பங்களை வீதியில் நிறுத்தி குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை துயரங்கள் தொடர்கின்றன.
பொது இடங்களில் இருந்து மது அருந்துவது அண்மை காலங்களில் அதிகரித்து வருகின்றமை பொது மக்களிடையே பாரிய அதிர்வலைகளை தோற்றுவிற்பதாகவும், இதனால் பாலியல் சேட்டைகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
தற்போது பாடசாலை மாணவர்களிடையேயும் போதைபொருள் பாவனை என்பது நாளுக்கு நாள் கூடிக்கொண்டு செல்கின்றது.
அதனை நிறுத்த சன சமூக நிலையங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், பொலிஸார், வணக்கஸ் தலங்களின் தலைவர்களை அழைத்து ஆலோசனைகளை பெறப்போவதாகவும், இதன்மூலம் எமது பகுதி மக்களின் உயிர் பலிகளையும் குடும்ப பிணக்குகளையும் தடுத்து வளமான கல்வி சமூகத்தினையும் பொருளாதாரத்தினையும் கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச்சபை நடவடிக்கையின் போது மக்களின் அபிவிருத்தி நிலை தொடர்பாகவும், வாழ்வாதார நிலை தொடர்பாகவும் அனைவராலும் ஆராயப்பட்டது.
இதன்போது தவிசாளரினால் போதைப்பொருள் பாவனை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோது அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தெரிவித்து ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.