ஓடும் ஆட்டோவில் அத்துமீறிய டிரைவர்.. தப்பித்து ஓடிய மாணவி..

சென்னை: சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ய முயற்சி செய்த ஓட்டுனர் உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டியிலிருந்து அய்யப்பன்தாங்கல் செல்லும் ஆட்டோ ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறினார். ஆட்டோ சென்றுகொண்டிருக்கும்போது,

ஓட்டுனரும் மற்றொரு நபரும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த மாணவி திடீரென்று ஆட்டோவிலிருந்து கீழே குதித்து தப்பினார். பின்னர் இதுகுறித்து தன்னுடைய தந்தையிடம் அழுதவாறே முறையிட்டார்.

இதனையடுத்து, அவரது தந்தை போலீசில் மகளுக்கு நடந்த சம்பவத்தை குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்தனர்.

ஆட்டோ சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான ஆட்டோ சிக்கியது.

அதனை தொடந்து கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன், கோவூரை சேர்ந்த பவீன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.