அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை பெற்ற தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணு தேவி. 46 வயதான இவருக்கு 25 வயதில் மின்டு ராம் என்ற மகன் ஒருவர் உள்ளார். மின்டுவுக்கு திருமணமாகிவிட்டது. அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் மின்டு அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களை கேலி கிண்டல் செய்வதும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுமாய் இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் கடன் பெற்று கொண்டு அதனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியும் வந்துள்ளார்.
மேலும் தாயார் ரேணு தேவியையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார் ரேணு.
ஒரு கட்டத்தில் மின்டுவின் சேட்டைகள் எல்லை தாண்டவே அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் ரேணுதேவி. இதற்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து மகனை கொலை செய்ய செய்துள்ளார். அவர்களுடன் மின்டுவை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது, மின்டுவின் மனைவி, தனது கணவர் கொலையில் மாமியார் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து பொலிசாரின் சந்தேகம் ரேணுதேவியின் பக்கம் திரும்பியது. பொலிசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ரேணுதேவி பின்னர் கொலையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகனை தாயே கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.