திண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி. என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 10-ம் தேதி காலை பிரசாந்த் என்ற இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அறையினுள் சென்ற இருவரும் கதவை பூட்டிக் கொண்டு, வெளியே வராமல் இருந்துள்ளனர். நேற்று மதியம் ஊழியர்கள் அவர்களின் அறைக்கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சரி, பிறகு வந்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர். ஆனால் இன்று காலையும் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோது அப்போதும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த பொலிசார் அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கே பிரசாந்த் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கே பிரசாந்துடன் தங்கியிருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்து கிடந்தார்.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்துகொண்ட பிரசாந்த், நிலக்கோட்டை கொங்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் என விடுதியில் முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாந்த் முகவரி உண்மைதானா? கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் யார்? அவர்களுக்குள் என்ன தகராறு? என்பன குறித்து விசாரணையை கையிலெடுத்துள்ளனர்.