அடைமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை!

நாட்டின் சில பகுதிகளில் பெய்த அடை மழை காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெய்த அடைமழை காரணமாக காலி, களுத்துறையிலுள்ள சில பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்தப் பகுதியிலுள்ள தாழ் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் மழைநீர் வடிந்து வருவதாகவும் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

இன்று காலை ஆறு மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் காலி ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. 175 மில்லிமீற்றராக பதிவாகி உள்ளது.

இதேவேளை நேற்றிரவு பெய்த அடை மழைகாரமாக காலி நகரின் தங்கெதர டிடிஸ்வத்தை கிராமம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

இந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த வீடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

இதனால் இன்று அதிகாலை 3 மணியளவில் வேறொரு பிரதேசத்திற்கு சடலம் கொண்டு செல்ல நேரிட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் காலி நகரத்தில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. கோனபீனுவல என்ற பகுதியில் 125 மில்லமீற்றர் மழை வீழ்;ச்சியும் ஹக்மீமன பகுதியில் 98 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக பேருவளை, பாணத்துறை ஆகிய பிரதேச பகுதிகளில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்பில் நீர் வழிந்தோடுவது தடைப்பட்டமை இதற்கு காரணம் என்றும் மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் கேணல் பிரசாத் ஜயசிங்க தெரிவித்தார்.