இந்தியாவில் படிப்புக்கு உதவி கேட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் அருகிலுள்ள சம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி(45), அங்கிருக்கும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவரிடம் படித்த சுமதி(17) என்ற மாணவி முஞ்சின்டலா கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது இன்டர்மீடியட் படித்து வரும் இவர் ஒரு பாடத்தில் பெயில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அக்பர் அலி தான் அந்த பாடத்தை சொல்லித் தருகிறேன் என்று கூறி, அதன் பின் அவருக்கு பாடம் சொல்லி கொடுத்துள்ளார், அப்போது மாணவி மீது அக்பர் அலிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மாணவியிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, சம்ஷாபாத் பகுதியில் ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதே போன்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளவர், மாணவியை திருமணமும் செய்து கொண்டார்.
இந்நிலையில் மகளை காணவில்லை என்று சுமதியின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை, அதன் பின் இறுதியாக அவர்கள் அக்பர் அலியிடம் கேட்ட போது, அவர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின் அக்பரை கைது செய்த பொலிசார் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.