லாலு மகன் திருமணத்தில் சர்ச்சையை கிளப்பிய, ‘பேனர்’

பாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மகன் திருமணத்தில் வைக்கப்பட்ட சிவன் – பார்வதி, ‘பேனர்’ கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

லாலு பிரசாத் மகன், தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீஹார், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹாரில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமணத்தை முன்னிட்டு, லாலு பிரசாத் வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பேனர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மணமகன் தேஜ் பிரதாப், சிவன் வேடத்திலும், மணமகள் ஐஸ்வர்யா ராய், பார்வதி வேடத்திலும் நிற்கின்றனர்.

அவர்களின் காலருகே அமர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள இளைஞர் அணி துணை தலைவர், பீம்லேஷ் யாதவ், சிவலிங்கத்துக்கு பூஜை செய்வது போல், பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

கண்டனம் :

அதில், மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை வைத்த, பீம்லேஷின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் தொடர்பாக, சமூக வலைதளங்களில், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. லாலு மகனை, சிவனை போல சித்தரித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.