ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்தா: கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் பெரும்­பான்மை ஆத­ரவு, பஸில் பொருத்­த­மா­னவர் என ஒருசாரார் தெரி­விப்பு

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களமிறக்க ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்குள் ஏக­ம­ன­தான ஆத­ரவு இருப்­ப­தா­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்புக் குழு­வி­னது ஆத­ரவும் இதற்குக் கிடைக்கும் எனவும் கூட்டு எதிர்க்­கட்சி தெரி­விக்­கின்­றது.

அடுத்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்­க­வுள்ள நிலையில் இந்த விவ­கா­ரங்கள் பேசப்­படும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லினை இலக்கு வைத்து பிர­தான கட்­சிகள் அனைத்தும் காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஆக்­கின தனித்த பய­ணங்­களை முன்னெ­டுக்க தீர்­மா­னித்­துள்­ளன. அர­சியல் மேடை­க­ளிலும் அவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்தும் வரு­கின்­றனர்.

பொது­ஜன முன்­ன­ணியின் தீர்­மானம்

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வாராந்த உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழ­மையும் இடம்­பெற்­றுள்ள நிலையில் இதில் பிர­தான விட­ய­மாக அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

இதன்­போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்­களே அதி­க­மாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை நிய­மித்தால் சிங்­கள மக்கள் மத்­தியில் பாரிய ஆத­ர­வினை பெற்றுக்­கொள்ள முடியும் எனவும் இதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆழ­மாக கலந்­து­ரை­யாடி அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் கூட்­டத்தில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எவ்­வாறு இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வுடன் மட்­டுமே இதனை முன்­னெ­டுக்க முடியும். மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக் ஷ என்ற அடை­யாளம் மட்­டுமே ஆழ­மாக பதிந்­துள்ள நிலையில் அவரின் தெரிவே இறு­தி­யாக இருக்க வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்னா ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவை நாடு­கின்­றது

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முழு­மை­யான ஆத­ரவு கிடைக்­காத போதிலும் பெரும்­பான்மை ஆத­ரவு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்­கமே உள்­ளது. எனவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இது குறித்து கலந்­து­ரை­யா­டவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்டு எதிர்க்­கட்சி முக்­கிய பிர­மு­கர்கள் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யி­ன­ருக்கும் இடையி­லான விசேட சந்­திப்­பொன்று இந்த வாரம் இடம்­பெறும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போதிலும் இந்த சந்­திப்­பினை அடுத்த வாரம் நடுப்­ப­கு­தியில் நடத்­து­வ­தாக கூறு­கின்­றனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் 16 பேரும் சுயேச்­சை­யாக செயற்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள போதிலும் அவர்­களும் கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டவே வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதேபோல் சுயேச்­சை­யாக செயற்­ப­ட­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அக்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

ஜனா­தி­பதி தலை­மையில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­யக்­குழு கூடும்

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் விசேட மத்­திய குழுக் கூட்டம் எதிர்­வரும் 17ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கூட­வுள்­ளது. இந்த மத்­திய குழுக் கூட்­டத்­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மிக முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்கும் என அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக தெரி­வித்­துள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈரா­னுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு எதிர்­வரும் புதன்­கி­ழமை நாடு திரும்­ப­வுள்ள நிலையில் அதற்குப் பின்னர் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்தும் கட்­சியின் அடுத்த கட்ட இலக்­குகள் குறித்தும் கலந்­து­டை­யா­டப்­ப­ட­வுள்­ளது எனவும் அவர் கூறினார்.

அத்­துடன் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் மைத்­தி­ர­பால சிறி­சேன என்­பது இப்­போது உறு­தி­யா­கி­விட்­டது. ஆகவே அவரை முன்னிலைப்படுத்­திய வேக­மான மக்கள் மய­மாக்கல் நகர்­வு­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­னெ­டுக்­க­வுள்­ளது. அதற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க இந்த மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் கலந்­து­டை­யா­டப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பயணம்

இந்­நி­லையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது என்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பாரிய நெருக்கடிகள் நிலவுவதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து செயற்படுவதை போலவே இரண்டாம் நிலை உறுப்பினர்களும் இளம் உறுப்பினர்களும் நவீன் திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.