தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும்.
இந்த உலகில் இப்படி ஒரு உன்னத தலைவன் இருந்ததாக வரலாறு இல்லை என வன்னிக்குரோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் இறுதி வாரத்தின் முதல்நாளாகிய நேற்று (12/05/2018) மரணித்த மாவீரனின் தாயாரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளினை இழந்த சிறார்களினால் மே18 நினைவு தின படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கத்தோடு முள்ளி வாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வன்னிக்குரோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் ஆற்றிய சிறப்பு உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,
‘என்றும் நாம் இழப்புகளினை கண்டு துவண்டு, சுறுண்டு வீடுகளில் உறங்கியவர்கள் அல்ல இழப்புகளுக்கு மேலாக மீண்டெழுந்து வந்தவர்கள்.
தழிழீழ விடுதலைப்புலிகள் மூன்று தசாப்தகாலமாக ஈழ விடுதலைப்போரை நடாத்தி, ஈழத்தமிழர் விடுதலைப்போரை உலகிற்கு எடுத்துக்காட்டிய உத்தமர்கள் அவர்கள். தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களையே சாரும். இந்த உலகில் இப்படி ஒரு உன்னத தலைவன் இருந்ததாக வரலாறும் இல்லை.
எனவே அப்படி இருந்த நிலையில், அழிக்கப்பட்ட நம் ஈழ போர், நம் ஈழ மைந்தர்கள், எம் மக்கள் இறந்த நாளை உலகிற்கு எடுத்துக்காட்ட நாம் அனைவரும் ஒரே மக்களாய் எம் மைந்தர்களினையும், எம் மக்களினையும் நினைவுகூற அவ் இடத்திற்கு நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் தானைத்தலைவன் காட்டிய வழியில் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக செல்லவேண்டும்’ என அறைகூவல் விடுத்திருந்தார்.
மேலும் 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வங்கி
கணக்குப்புத்தகமும், பயிற்சி புத்தகமும் மற்றும் முள்ளிவாய்க்காலில் தாய் தந்தையை இழந்த மாணவர்கள் மற்றும் போராளிகளின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.