பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உள்ளூர் விஜயங்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று சர்ச்சைக்குரிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
அவர் கடந்த 3 வருடங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மாத்திரம் அரச நிதியை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும்,
கடந்த 3 வருடங்களில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரை பயன்படுத்தி 64 விஜயங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.
மாத்தறை, தெனியாய சென்ற 64 முறையும் அவர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான “Bell-414” ரக ஹெலிகொப்டரிலேயே பயணித்துள்ளதாக அலரி மாளிகையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இந்த காலப்பகுதியினுள் நாட்டின் ஏனைய பிரதேச தேர்தல் பிரிவுகளுக்கு இத்தனை முறை விஜயம் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் பிரிவிற்கு அல்லது விசேடமாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய கொழும்பு தொகுதிக்கு 64 முறையல்ல 10 முறை கூட விஜயம் மேற்கொண்டதில்லை என குறித்த சிரேஷ்ட கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமல்ல பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதுவரையில் விஜயம் மேற்கொள்ளாத பல தேர்தல் பிரிவுகள் உள்ளதுடன், அவரின் தேர்தல் தொகுதி அல்லாத மாத்தறை தேர்தல் தொகுதிக்கு அவரின் இந்த விஜயங்கள் அமைந்துள்ளன.
பிரதமரின் பயணம் குறித்து கொழும்பு அரசியல் மட்டத்தில் பல்வேறு நபர்கள் பலவிதமான முறையில் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் பிரதமர் சிக்கியுள்ள நிலையில் புதிய நெருக்கடிக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.