திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பக்தர் ஒருவர் சாமியாடி சரமாரியாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
திருமலை மாடவீதியில் உள்ள வாரகசாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அருகில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
அப்போது, பக்தர் ஒருவர் திடீரென ஆவேசமாக சாமியாடினார். அவர், எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை சீரழித்து விட்டதாகவும், அவர் தன்னை வந்து பார்க்குமாறும் அழைப்பு விடுத்தார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர், அங்கிருந்த பொலிசார் அந்த பக்தரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குறித்த பக்தர் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராமலு என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், ஸ்ரீராமலுவின் செயலைக் கண்ட சக பக்தர்கள் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர், இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.