தலைமுறை வித்தியாசமின்றி நடிகையர் திலகத்தை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். நடிகை சாவித்திரி ஓர் அம்மாவாக எப்படி இருந்தார்? முதலில், அமெரிக்காவில் இருக்கும் மகன் ஸ்ரீராம நாராயண சதீஷ்குமாரிடம் பேசினோம். இரவு 11.45 மணிக்கு வாட்ஸ்அப் காலில் வந்தார். வேலை காரணமாக சில நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
“நானும் அக்காவும் போன வாரமே ஹைதராபாத்தில் ‘மகா நடி’ ப்ரிவியூ பார்த்துட்டோம். அம்மாவின் வாழ்க்கையை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. அம்மாவுக்கு இந்தத் தலைமுறையிலும் ஃபேன்ஸ் இருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு.
அம்மாவின் கடைசி நாள்களில் பக்கத்திலேயே இருந்தவன் நான். அப்போ எனக்கு 14 வயசு. புத்தி தெரிஞ்ச வயசுதான். அம்மாவின் கடைசி நாள்களில் எல்லோரும் நினைச்சுட்டிருக்கிற மாதிரி அவங்க தனியா இல்லை.
தேங்க் காட்… உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே படத்தில் காட்டியிருந்தாங்க” என்கிறார் நிம்மதிப் பெருமூச்சுடன்.
அடுத்து, சாவித்திரி மகள் விஜய சாமூண்டீஸ்வரியிடம் பேசினோம். அம்மா மற்றும் அப்பா பற்றிய சின்னச் சின்ன சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
`அம்மாவை, ‘அம்மாடி’ என்றுதான் அப்பா பாசமா கூப்பிடுவார். அதைப் படத்திலும் காட்டியிருக்காங்க. அப்பாவை, ‘கண்ணா’ என்றுதான் அம்மா கூப்பிடுவாங்க.
என்னையும் தம்பியையும் விஜிக்குட்டி, கண்ணு அப்படின்னு கூப்பிடுவாங்களே தவிர, முழுப் பெயர் சொல்லிக் கூப்பிடதே இல்லை. மற்ற அம்மாக்கள் மாதிரி காலையில் கண் விழிச்சதிலிருந்து நைட்டு தூங்கப்போகும் வரை எங்களோடு அம்மாவால் இருக்க முடிஞ்சதில்லை.
ஆனால், எங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூப்பிட்டுப் போயிடுவாங்க. அங்கே போர் அடிச்சதுன்னா, நானும் தம்பியும் ஸ்டூடியோவின் ஒவ்வொரு மாடிக்கும் போய் மத்தவங்களுடைய ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துட்டிருப்போம். அம்மாவுடன் பட்டாம்பூச்சி மாதிரி நாங்க சுத்தித் திரிஞ்ச சந்தோஷமான காலம் அது.
அம்மாவுக்கு மழையில் விளையாட ரொம்பப் பிடிக்கும். தூறல் ஆரம்பிச்சுட்டாலே, எங்களை வீட்டிலிருந்து லாபினுக்கு கூப்பிட்டு வந்துருவாங்க.
குளிரால் உடம்பு நடுங்கும் வரை மழையில் குதிச்சு குதிச்சு விளையாடுவோம். எல்லோரும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி, முயல் மாதிரியான பிராணிகளைத்தானே வீட்டில் வளர்ப்பாங்க? நாங்களோ, மான் குட்டி, புலிக்குட்டி எல்லாம் வளர்த்திருக்கோம்.
மான் சாது மிருகம்னாலும் துள்ளிக்குதிக்கும் விலங்கு இல்லையா? அதனால், மான் வளர்க்கக்கூடாதுனு அப்பா சொல்லிட்டார். ஒரு தடவை, புதுக்கோட்டை மகாராஜா வீட்டுக்குப் போயிருந்தப்போ,
அவர் பங்களாவில் இருந்த புலிக்குட்டிகளை நான் ஆசையோடு பார்த்துட்டிருந்தேன். உடனே, ரெண்டு புலிக்குட்டிகளை எனக்குப் பரிசா கொடுத்துட்டார்.
நாங்களும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டோம். அன்னிக்கு சாயந்திரம் அப்பா ஷூட்டிங் முடிஞ்சு வந்தபோது, அம்மா, நான், தம்பி மூணு பேரும் புலிக்குட்டிகளோடு விளையாடிட்டிருந்தோம். ரொம்ப டென்ஷன் ஆகிட்டார்.
‘இன்னிக்கு குட்டியா இருந்தாலும் இது காட்டு விலங்கு’னு சொல்லி, மிருகக்காட்சி சாலையில் ஒப்படைச்சுட்டார். அன்னிக்கு நானும் அம்மாவும் ரொம்ப நேரம் அழுதுட்டிருந்தோம்.
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்னிக்கும் அம்மா எங்களை ஸ்பென்சர் பிளாஸா கூட்டிட்டுப் போயிடுவாங்க. எதுக்கு தெரியுமா? அங்கே இருக்கும் சாண்டா கிளாஸைப் பார்க்க.
எங்க காலத்து மால், ஸ்பென்சர் மட்டும்தானே. கடைசியா ஒரு விஷயம், ‘நடிகையர் திலகம்’ படம் வர்றவரை அம்மாவின் கடைசிக் காலத்துல அவங்க கதியின்றி இறந்தாங்க என்றுதான் எல்லாரும் நினைச்சுட்டிருந்தாங்க.
ஆனால், இந்தப் படம் மூலமா அப்படி இறக்கலை. அம்மாவை அப்பா கைவிடலைன்னு உலகத்துக்குச் சொல்லமுடிஞ்சிருக்கு. உண்மையைச் சொன்ன படத்துக்கு நன்றி. இதுபோதும் எனக்கும் என் தம்பிக்கும்” என்கிற சாமூண்டீஸ்வரி குரலில் நிறைவும் நெகிழ்வும்.