இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிதாஜி சோலான்கி என்னும் விவசாயி, 70 நாட்களில் சுமார் 21 லட்சம் வருவாய் ஈட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் சந்தாஜி கோலியா எனும் கிராமத்தில் பிறந்தவர் கிதாஜி சோலான்கி(41), விவசாயியான இவரது தந்தை உருளைக்கிழங்கு, நிலக்கடலை போன்றவற்றை விளைவித்து வந்தார்.
ஆனால், நாளடைவில் இவரது விவசாயம் பாதித்தது. வறுமை காரணமாக கிதாஜி 7ஆம் வகுப்புடன் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டார்.
அதன் பின்னர், தனது தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்யவும், பொருட்களை விற்பனை செய்வதிலும் கிதாஜி அனுபவம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வது, அதற்கான உரிமையைப் பெறுவது மற்றும் சந்தைப்படுத்துவது போன்றவற்றை குறித்து அறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டில் கிதாஜி சோலான்கி மூத்த சகோதரர் கிராமத்திற்கு வெளியில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.
அதில் விவசாயம் மேற்கொண்ட கிதாஜி, தான் விளைவித்த உருளைக்கிழங்குகளை ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
ஆனால், உருளைக்கிழங்கை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்று நினைத்த கிதாஜி, புதிய முயற்சியாக முலாம் பழத்தை பயிரிட முடிவு செய்தார்.
புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொண்ட கிதாஜி, கைப்பேசிகளில் உள்ள விவசாயம் குறித்த செயலிகளை பயன்படுத்துவது குறித்து கற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் சோலார் பம்பு, சொட்டு நீர் பாசனம், வேர்ப்பாதுகாப்பிறகான வழிகளைக் கண்டறிந்தார்.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு முடிவில் கிதாஜியின் 4 ஏக்கர் நிலம் முழுமையான விவசாயத்திற்கு தயாரானது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் முலாம் பழ விதைகளை தனது 4 ஏக்கர் நிலம் முழுவதும் விதைத்தார் கிதாஜி.
அதன் பின்னர், ஆச்சரியமளிக்கும் வகையில் சுமார் 140 டன் முலாம் பழங்களை அறுவடை செய்தார் கிதாஜி. இந்நிலையில், முலாம் பழங்களை காஷ்மீருக்கு சுமார் 21 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார் அவர்.
140 டன் அளவு முலாம் பழங்களை உற்பத்தி செய்ய கிதாஜி செய்த முதலீடு 1.6 லட்சம். ஆனால், அவர் ஈட்டிய லாபம் 19.5 லட்சம். இதன்மூலம், 70 நாட்களில் 21 லட்சம் வருவாய் ஈட்டி அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார் கிதாஜி. மேலும், விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளார்.