இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இழப்பீட்டு தொகைக்கு ஆசைப்பட்டு சொந்த மகள் மற்றும் பேத்திகளை கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மமானி(32). இவரது கணவர் கடந்த மாதம் சாலை விபத்தில் பலியானாதால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் மாமனிக்கு இரண்டு லட்சம் இழப்பீட்டு தொகை அறிவித்தது.
இதற்கிடையே, மமானி மற்றும் அவரது இரு மகள்கள் வர்ஷா(10), திஷா(8) மற்றும் மகன் முனா(5) ஆகியோர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த 10-ம் திகதி, மகாநதி ஆற்றில் மிதந்த அவர்களின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
ஆரம்பத்தில், இந்த மரணங்களை தற்கொலை என விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். ஆனால் மமானி மற்றும் அவரது குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மமானியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய பொலிசார் மமானியின் தந்தை அக்ஷயா சேத்தியை இன்று கைது செய்தனர்.
இழப்பீட்டு தொகையான இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அக்ஷயா தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.