“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், ஆன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்காண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ‘myPersonality’ app ஆனது பயனர்களுக்கு மனவியல் பரிசோதனைகளை நடத்தி உடனடியாக முடிவுகளை அறிவிக்கும் ஒரு app ஆகும்.
மனிதர்களின் பயம், மனசாட்சி, வெளிப்படைத்தன்மை, அனுபவங்களை எதிர் கொள்ளும் தன்மை மற்றும் ஒப்புக்கொள்ளும் தன்மை ஆகிய ஐந்து அந்தரங்க குணங்களை வெளிப்படுத்தும் கேள்விகள் இச்சோதனையில் கேட்கப்படும்.
தற்போது ஏற்பட்டுள்ள தகவல் கசிவினால் 3.1 மில்லியன் பயனர்களின் மிக அந்தரங்க தகவல்களான மன நலம் குறித்த இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்குபெற்றபின் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு பிரத்தியேக ஐ.டி கொடுக்கப்படும்.
இந்த ஐ.டி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Psychometrics மையத்தில் இத்தகவல்களைக் காக்கும் பொறுப்பிலுள்ள David Stillwell மற்றும் Michal Kosinski ஆகியோரின் கட்டுப்பாட்டிலிருக்கும்.
ஆனால் இந்த தகவல்களை அணுகும் பாஸ்வேர்ட் முதலானவை GitHub என்னும் இணையதளத்திலேயே கிடைக்கின்றன.
இவற்றைப் பயபடுத்தி ஒரே நிமிடத்தில் தகவல்களை சென்றடைய முடியும். இவ்வளவு பெரிய இந்த பிரச்சினை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட பேஸ்புக் ஏப்ரலிலேயே ‘myPersonality’ appஐ இடைநிறுத்தம் செய்து விட்டதாகக் கூறியுள்ளது.
தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறியுள்ள பேஸ்புக், விசாரணை முடிவுகளைப் பொருத்து ‘myPersonality’ appஐ நிரந்தரமாக அகற்றக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
Cambridge Analytica பிரச்சினையைத் தொடர்ந்து சுமார் 200 appகளை இடைநிறுத்தம் செய்து விட்டதாக அறிவித்த சில மணி நேரத்தில் இந்த தகவல் கசிந்த விடயம் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரச்சினை வெளியாகுமுன் தகவல்களை யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள், யாரிடமெல்லாம் தகவல்கள் உள்ளன அவர்கள் தகவல்களை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பது குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாது என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது.