குமரி மாவட்டத்தில் வீட்டு பில்லரில் சேலை கட்டி ஊஞ்சல் ஆடிய 13 வயது சிறுமி, பில்லர் உடைந்து விழுந்து பரிதாபமாகப் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த செட்டியார்மடத்தைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன், தேவிகா. இவர்களின் மகள் பவிஸ்யா (வயது 13). அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்தார். இவரது வீட்டுக்கு முன்பகுதியில் செங்கலால் பில்லர் கட்டி அதில் ஷீட்டால் ஷெட் போடப்பட்டிருந்தது. அந்த பில்லரிலும் வீட்டு ஜன்னலிலும் சேலையைக் கட்டி அதில் பவிஸ்யா ஊஞ்சலாடுவது வழக்கம்.
வழக்கம்போல சிறுமி பவிஸ்யா இன்று காலை ஊஞ்சல் ஆடியிருக்கிறார். அப்போது திடீரென செங்கல் பில்லர் உடைந்து பவிஸ்யாவின் மீது விழுந்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த பவிஸ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஊஞ்சல் ஆடிய சிறுமி பில்லர் விழுந்து பலியான சம்பவம் இரணியல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.