காணாமல் போன காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் என்ன ஆனார்கள்? 10 முக்கியத் தகவல்கள்-

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மதசார்பற்ற எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காததால் பரபரப்பு என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், 12 பேர் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சியமைக்க தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, ஆளுநரை இன்று காலை மீண்டும் சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார்.

இரு தரப்பும் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டிவரும் நிலையில், மாயமான எம்எல்ஏக்களின் நிலை என்ன?

இது பற்றி கூறப்படும் 10 தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

1 . 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு எப்படி பெரும்பான்மை கிடைத்தது என்ற கேள்விக்கு, பாஜக தலைவர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, “இது இயற்கையாகவே நடந்தது. காங்கிரஸ் – மஜத இடையேயான தவறான உறவை சில எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

2. எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாக, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தனியார் விடுதிகளில் தங்க வைக்க இரு கட்சித் தலைவர்களுமே முன்னதாக திட்டமிட்டனர். ஏன் என்றால், பாஜக தரப்பில் இருந்து மஜத எம்எல்ஏக்கள் 5 பேரை அழைத்து பேரம் பேசியதாக அக்கட்சியும், இதே விஷயத்தை காங்கிரஸும் கூறியுள்ளன.

3. இன்று காலை, காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜ்ஷேகர் பட்டீல், நரேந்திரா மற்றும் ஆனந்த் சிங் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. இதில் இரண்டு பேர் சுரங்க முறைகேட்டில் சிக்கிய ரெட்டி சகோதரர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

4. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒன்றாக இருக்கிறார்கள். யாரும் மாயமாகவில்லை. கர்நாடகாவில் ஆட்சியமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சித்தராமையா கூறினார். இன்று காங்கிரஸ் மற்றும் மஜத தரப்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டன.

5. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், ஒரு சுயேட்சை வேட்பாளர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

6. யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சியமைக்க மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

7. தற்போது இரு தரப்பில் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநர் வஜுபாய் வாலாவின் கையில் உள்ளது. அவர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

8. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பெரும்பான்மை கொண்ட கட்சியையே ஆளுநர் அழைக்க வேண்டும். அந்த வகையில், 117 தொகுதிகளை வைத்திருக்கும் எங்களையே ஆளுநர் அழைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

9. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது, காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்து ஆட்சியமைப்போம் என்று குமாரசாமி கூறியுள்ளார். அதே போல, மஜத எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி பணம் வழங்குவதாக பாஜக பேரம் பேசியுள்ளதாகவும் குமாரசாமி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

10. இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சிலரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!