தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தற்கொலை செய்த மாணவன் தினேஷ்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், “அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று  பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது. அவர் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இது பற்றி தினேஷின் மாமா சங்கரலிங்கம் கூறுகையில், “நன்றாகப் படிக்கக்கூடிய தினேஷ், மருத்துவத்துக்கான நீட் தேர்வினைச் சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக அவனும் சிறப்பான வகையில் தேர்வுக்காகத் தயாராகி வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டான். பிளஸ் டூ தேர்வு முடிவு வந்துள்ள நிலையில் அவன் இல்லை. ஆனால், அவனுடைய மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம்’’ என்றார்.