வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு அரசியல்வாதிகள் தெற்கு அரசியல்வாதிகளை குறை கூறுகின்றனர்.
அதேபோல் தெற்கு அரசியல்வாதிகளும் வடக்கு அரசியல் வாதிகளைக் குறைகூறுகின்றனர்.
இது அவர்கள் பிரச்சினை. இவ்வாறான குற்றச்சாட்டுகள் அரசியல் இலாபத்திற்காகவே தெரிவிக்கப்படுகின்றன.
அதேபோல் எழுந்துள்ள இந்தப் பெயர் சூட்டும் செய்தியும் உண்மைக்குப் புறம்பானதே” எனத் தெரிவித்தார்.