இலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து, இலங்கைதீவு – அபிவிருத்தி, ஜனநாயம், நல்லாட்சி, அரசியல்தீர்வு, பொறுப்பு கூறல் போன்றவற்றை நோக்கி செல்கிறதாக கூறுகிறார்கள்.
இலங்கைதீவில் பிறந்து வளர்ந்து – தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல இனக்கலவரங்களையும், பல ஏமாற்று உடன்படிக்கைகள் கிழித்து எறியப்பட்டதையும், தமிழினம் அழிக்கப்படுவதையும், கல்வி தரப்படுத்தல் மட்டுமல்லாது, எமது தாயாகபூமி நாளுக்கு நாள் பறிக்கப்படுவதையும் கண்டு அனுபவித்தவன் என்ற முறையில், எனது அனுபவரீதியியான யாதார்த்த உண்மைகளை இங்கு பகிர்ந்து கொள்வது எனது கடமை.
எனது விடயங்களை எழுதுவதற்கு முன்பு – அதாவது, யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்), எதற்காக நாளுக்கு நாள் மிகவும் மோசமாக அதிகரித்து செல்கிறது என்ற வினாவிற்கு, நாம் விடை காண வேண்டும்.
சிறிலங்காவின் இராணுவ செலவுகள் ( உள்நாட்டு நிதியின் அடிப்படையில் அமெரிக்கா டொலர்)
வருடம் – தொகை
2005 – 64,742,000,000
2011 – 193,700,000,000
2006 – 82,247,000,000
2012 – 188,202,000,000
2007 – 116,687,000,000
2013 – 206,619,000,000
2008 – 163,732,000,000
2014 – 249,978,000,000
2009 – 174,973,000,000
2015 – 279,486,000,000
2010 – 173,217,000,000
2016 – 289,160,000,000
தற்போதைய நிலையில், இலங்கைதீவில் யுத்தம் நடைபெறவில்லை. இதன் காரணமாக சிறிலங்காவின் – தரை, கடல், ஆகாயம் ஆகிய பாதுகாப்பு படைகளின் சிப்பாய்கள் வேலையின்மை காரணமாக, சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் விடுதிகள், உணவகங்கள், வியாபார நிலையங்கள், மீன்பிடி, தோட்டங்கள், விவசாயம் போன்ற துறைகளில் பாரிய ரீதியில் ஈடுபட்டு, சிறிலங்காவிற்கு பெரும் தொகை பணத்தை சம்பதித்து கொடுக்கின்றனர்.
இதேவேளை, பாவிக்கப்படாத இராணுவ ஆயுத தளபாடங்கள், வேறு நாட்டிற்கு அல்லது ஆயுத தரகர்களிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை மிக சுருக்கமாக கூறுவதானால், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, யுத்த காலத்தில் இருந்தது போல் அல்லாது கோடிக்கணக்கான பணத்தை மேலதிகமாக தினமும் சம்பதித்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. அப்படியானால் எதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) நாளுக்கு நாள் அதிகரிக்கிறது?
பல ஆய்வாளர்கள், பத்திரிகையாளர் இவ்விடயமாக தமது ஆய்வை ஆரம்பித்த பின்னர், புரியாத காரணங்களுக்காக அது பற்றி மேலும் தொடர்வதை தவிர்த்துள்ளனர்.
இங்குதான் மக்கள் குழப்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சிலர், நாளுக்கு நாள் எதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு (பட்ஜெட்) அதிகரிக்கிறது என்பதை நன்கு அறிவார்கள்.
உண்மை பேசுவதனால், யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, தமது வழமையான நான்கு தூண்கள் பற்றிய வேலை திட்டங்களான – பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்காக பலவிதப்பட்ட புதிய வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.
சிறிலங்காவின் வேறுபட்ட அரசாங்கங்கள், தாம் கூடிய விரைவில், அரசியல் தீர்விற்கும் பொறுப்பு கூறலிற்கும் உள்நாட்டில் நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமுதாயத்திற்கு கொடுத்துள்ள வாக்குறுதி காரணத்தினால், தமது நான்கு தூண்கள் பற்றிய நடைமுறைப்படுத்தலை, மிகவும் அவதானமாகவும் நாசுக்காகவும் நடைமுறைபடுத்துகின்றனர்.
சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களை பொறுத்த வரையில், தாம் மிகவும் வெற்றிகரமாக பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை நடைமுறைபடுத்தி முடித்த பின்னர், சர்வதேச சமுதாயம் ஒரு பொழுதும் தமிழர்களது அரசியல் உரிமை பற்றியோ, பொறுப்பு கூறல் பற்றி எந்தவித அக்கறையும் கொள்ள போவத்தில்லை என்பதே சிந்தனை.
நேரம் காலம் கடத்தப்படுகிறது
யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, சிங்கள அரசுகள் என்றும் தமது வழமையான நான்கு தூண்கள் பற்றிய வேலை திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக, நேரம் காலம் கடத்துதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர். இவற்றை எமது சகல தமிழ் தலைவர்களும் இன்னும் புரியவில்லை என்பது மிகவும் வெட்ககேடான விடயம்.
யாவற்றையும் வெற்றிகரமாக செய்வதற்காக, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு – இணையதளங்கள் உட்பட, பல தமிழ் ஆங்கில ஊடகங்களை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்கு நம்பிக்கைகுரிய மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக நடத்தி வருகின்றனர்.
சிறிலங்காவின் பிரச்சார பீரங்கிகள் பலர், ஊடகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் யாவரும் மறைமுகமாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சிற்கு ஊதியத்திற்கு வேலை செய்பவர்களே.
இதேவேளை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் மறைமுக உதவி மூலம், சிறிலங்காவிற்கான பிரச்சார திரைபடங்கள் பல, வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் இவ் அடிப்படையில், சிறிலங்கா எதிர்நோக்கும் சர்வதேச அழுத்தம், ஐ.நாவின் அழுத்தங்கள் போன்றவற்றிற்கு பதில் கூறும் முகமாக வெளியிடப்பட்ட சிறிலங்காவின் ஓர் திரைப்படத்தை பாரிஸில் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது.
இவர்கள் மிகவும் சாதுரியமாக புலம்பெயர் வாழ் தமிழர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, இவ் திரைபடம், “கான்” வரை சென்றுள்ளது வியப்பிற்குரியதல்ல. இவ் திரைபடம், “கான்” மட்டும் அல்லாது, வேறு பல திரைப்பட போட்டிகளிற்கு செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெறுகின்றன.
நிச்சயமாக இவ் திரைபடம் “கான்” வரை செல்வதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பாரிய நிதி, செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு செலவிடப்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இதில் வேடிக்கை என்னவெனில், இவ் திரைபடத்தில், முன்னாள் போராளிகளாக நடித்துள்ளவர்கள், ஒட்டு குழுக்களை சார்ந்தவர்கள். இவ் திரைபடத்தை மிகவும் பிரபல்யம் ஆக்குவதற்காக, இவ் திரை படத்தின் கன்னி இயக்குனர், தான் ஒரு மனித உரிமை ஆர்வளர், தற்பொழுது திரைபடம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.
ஆனால் இவ் திரைபடம் மனித உரிமை, மனித நேயம், மக்கள் உரிமை என்பவற்றை எந்தவித்திலும் கவனத்தில் கொள்ளவில்லை. இவ் திரைப்படத்தின் இயக்குனர் ஓர் செவ்வியில், திரைப்படம் என்றால் அவை பிரச்சாரத்திற்காகவே தயாரிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். ஆகையால் இவ் திரைப்படமும் சிறிலங்காவின் பிரச்சார வேலை என்பதை அவர் ஒத்துகொள்கிறார்.
இதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மறைமுக ஆதரவில், சுயசரிதை எழுதுபவர்களும், புத்தகங்கள் வெளியிடுபவர்களும் தற்பொழுது உருவாகியுள்ளனர்.
இவர்களது படைப்புக்கள் யாவும், சிறிலங்காவை நியாயப்படுத்துவதுடன், தமிழ் தேசியத்திற்கும் தமிழர் ஒற்றுமைக்கும் உலை வைப்பதாகவும், அதேவேளை, சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் யாவும் தேவையற்றவை என்ற அடிப்படையிலேயே இவர்கள் செயற்படுகின்றனர்.
உதாராணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் எந்தவித பிரயோசனமும்மில்லை என்பவர்கள் யாவரும், சிறிலங்கா அரசிற்கு ஆயுதபோராட்ட காலத்தில் வக்காளத்து வாங்கியவர்கள். இப்பொழுதும் ஒற்றுமை சிநேகிதம் என்பவற்றிற்கு பின்னால் மறைந்து நின்று தமிழர்களது மனேநிலையை உடைக்கிறார்கள்.
இவர்களது உள்நோக்கம், பாதிக்கப்பட்டவர்களிற்கு ஐ.நா மீதுள்ள நம்பிக்கையை இழக்க பண்ணுவதே. இது சிங்கள பெளத்த அரசுகளின் திட்டம்.
பிரித்து ஆளும் தன்மை
இப்படியாக பாரிய நிதியை விரயம் செய்து, தமிழர்களை சின்னாபின்னமாக்குவதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் செய்யப்படும் வேலை திட்டங்கள் பல.
தமிழ் மக்களிற்குள்ளும், முஸ்லிம் மக்களிற்குள்ளும் குரோதங்களை வளர்த்து விடுவதுடன், தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஒற்றுமையாக நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழவிடாது, பிரித்து ஆளுவதற்காக, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கோடிக்கணக்கான நிதியை செலவிடுகிறது.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் மழைக்கு உருவாகும் காளான்கள் போன்று – பல அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், ஒற்றுமை நட்பு சங்கங்களும், பல மொழிபெயர்ப்பு நிலையங்களும், மாநாடுகளும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடனும், பண உதவியிலும் உருவாக்கப்பட்டுள்ளன, உருவாக்கப்படுகின்றன.
இவை யாவும், தமிழ் தேசியத்தையும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை போராட்டத்தையும் அழிப்பதற்காகவே நடைபெறுகின்றது. இதேவேளை, ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து, பலவிதப்பட்ட மேற்கு நாட்டவர்கள், பாரிய ஊதியத்துடன் சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்களிற்கு எதிராக வேலை செய்வதற்காக அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் சிறிலங்காவிற்கு சார்பாக செய்திகளும் அறிக்கைகளும் வெளியிடுகின்றனர்.
அடுத்து, பணத்திற்காக ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் வேலை திட்டத்தையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, மிகவும் திறம்பட செய்துவருகிறது. வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வரும் மக்களை, இரு முக்கிய காரணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளிற்கு கடத்தி செல்லப்படுகின்றனர்.
ஒன்று, இலங்கைதீவில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், அதேவேளை புலம்பெயர் தேசங்களிலிருந்து சிறிலங்காவிற்கு அனுப்பப்படும் பணம் மூலம் பாரிய வெளிநாட்டு செலவாணியை தாம் பெற்று கொள்ளும் நோக்கில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.
அதேவேளை, வடக்கு கிழக்கு முழுவதும் புத்தர் சிலைகள் நாட்டுவதற்காகவும், சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்காகவும, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பெரும் தொகையான பணம் செலவிடப்படுகிறது.
இவை யாவும் ஒருபுறம் நடைபெறும் வேளையில், பிரான்ஸ், பிரித்தானிய, கனடா மற்றும் வேறு சில மேற்கு நாடுகளில் – உணவகங்கள், பலசரக்கு கடைகள், புடைவை கடைகள், நகைகடைகள், புத்தக கடைகள் போன்றவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மறைமுக முதலீட்டுடன் நடைபெறுகின்றன.
இவ் வர்த்தக நிலையங்கள் மூலம் புலம்பெயர் செயற்பாடுகள் பற்றி தகவல் சேகரிக்கப்படுவதுடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாளர்களின் சந்திப்பு நிலையங்களாகவும் இவை இயங்குகின்றன.
இவ் சந்தர்ப்பத்தில், நாம் ஓர் முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, கபட வழக்கறிஞரும், தமிழிழத்தின் நிரந்தர பிரதிநிதியென தனக்கு தனே கூறுபவரும், ஐ.நா. மனித உரிமை சபையில் தானும் ஒரு தமிழ் செயற்பாட்டாளர் போன்று நடிப்புடன் செயற்படும் அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் ஊதியம் பெறுவதை எப்படி எல்லாராலும் அறிய முடியும்?
சிறிலங்காவின் போர்களம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, என்னால் எழுதப்பட்ட, “சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளது”என்ற கட்டுரைக்கு சில விடயங்களை மேலதிகமாக இன்று இணைக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஜெனிவாவில் இறுதியாக நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 37ஆவது கூட்ட தொடரிற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு படையை சார்ந்த ஏறக்குறைய நாற்பது சிப்பாய்கள் வருகை தந்திருந்தனர் என்பதை யாவரும் அறிந்திருக்கலாம்.
இவர்கள் யாவரும் வேறுபட்ட படை பிரிவை சார்ந்த சிங்கள பௌத்தவாதிகள். இவர்களில் பலர் சிறிலங்காவிலும், சிலர் வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர். சிறிலங்காவின் பௌத்த சிங்களவாதிகளை பொறுத்த வரையில், இவர்கள் யாவரும் ‘யுத்தத்தின் கதாநாயகர்கள்’.
இவர்கள் கடற் தளபதி, கேர்ணல்கள், புலனாய்வு பிரிவின் இயங்குனர்கள் போன்ற பதவிகளை சிறிலங்காவில் வகித்தவர்கள் வகிப்பவர்கள். ஆனால் இவர்களில் பலர் போர் குற்றவாளிகள்.
இவர்களில் ஒருவர், சிறு பிள்ளை இராணுவத்தை கொண்டுள்ள சிறிலங்காவின் சிவில் பாதுகாப்பு படையின் பொறுப்பாளராக கடமை வகிப்பவர். இப்படி பெரும் தொகையான சிறுபிள்ளை இராணுவத்தை கொண்டுள்ள சிறிலங்காவின் சிவில் பாதுகாப்பு படை பற்றி, இன்று வரை கொழும்பில் உள்ள சிறுபிள்ளை இராணுவம் பற்றிய நிபுணர்களிற்கு தெரியாதிருப்பது மிகவும் வியப்பான விடயம்.
ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தந்த படையினரிடம், யாவரும் கேட்க வேண்டிய வினா என்னவெனில், இவர்களது விமானசீட்டு, சொகுசான தங்குமிடம், உணவு போன்றவற்றுடன், உள்நாட்டு போக்குவரத்து ஆகியவற்றை இவர்களிற்கு யார் வழங்குகிறார்கள் என்பதே? இவர்களால் இப்படியாக தமது தனிப்பட்ட பணத்தை செலவு செய்து ஜெனிவா வந்து செல்ல முடியுமா?
இவர்கள் யாரும் ஐ.நா.வை பற்றிய அறிவையோ அல்லது மனித உரிமை சபையின் செயற்பாடு பற்றிய தெளிவையோ கொண்டவர்கள் அல்லா. சுருக்கமாக கூறுவதாயின், இவர்களது வருகையின் நோக்கம் விசித்தரமானது அல்லா. இவர்கள், தம்மால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களை நியாயப்படுத்துவதற்காகவும், தமது நான்கு தூண் திட்டம் வெற்றியாக நிறைவேறும் வரை, நேரம் காலத்தை கடத்துவதையே முக்கிய பணியாக கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, என்னால் எழுதப்பட்ட, கட்டுரையில் தற்பொழுதும் சிறிலங்காவின் இராணுவ புலனாய்வுடன் நெருங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போர் குற்றவாளியான சுவிஸ்லாந்தில் வாழும் பாலிபொடி ஜெகதீஸ்வரன் பற்றி எழுதியிருந்தேன். இவர் ஐந்நூறு (500) பேருக்கு மேற்பட்ட, வடக்கு கிழக்கு வாழ் அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தவர்.
இவர் பற்றி சில மனுக்கள், சுவிஸ்லாந்து அரசாங்கத்திற்கு அனுப்பட்ட பொழுதிலும், இன்று வரை இவ் போர் குற்றவாளி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சீவில் சமூகத்திற்கு மிகவும் வியப்பான விடயம்.
எனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட மற்றைய நபர் – சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஊழியத்துடன் பத்திரிகையாளர் என்ற போர்வையில் பல நாடுகளை வலம் வரும் கீர்த்தி வர்ணசுரியா.
வேடிக்கை என்னவெனில், இவ் கபடமான பத்திரிகையாளருக்கு, ஐ.நா.வில் பாவனையில் உள்ள மொழிகளான – ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய, சீனா, ரஸ்ய, அரேபிய மொழிகளில் ஒன்றை கூட எழுத வாசிக்க பேச தெரியாத நிலையில், இவர் ஐ.நா.விடயங்களை செய்தி ஆக்குவதாக கூறி ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து செல்கிறார். இவர் போன்று பல தமிழர், 2012ஆம் ஆண்டின் பின்னர் ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து செல்கிறார்கள் என்பது வேறு கதை.
இவ் கபடமான பத்திரிகையாளர், ஐ.நா.மனித உரிமை சபையில், ஒருமுறை என்னை பார்த்து, நீ சிறிலங்கா வந்தாயானால், உன்னை கொல்வோம் என முழக்கமிட்டவர். இவை யாவும் ஐ.நாவின் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மீது மசவாசவாக வேலைதிட்டங்களை மேற்கொள்வோருக்கு – ஐரோப்பா, பிரித்தானிய, கனடா, ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மூளை கழுவும் பட்டறைகள் மாதாந்தம் நடாத்தப்படுகின்றன.
இவற்றை நாம் வசிக்கும் நாட்டில் தளம் கொண்டுள்ள சிறிலங்கா புலனாய்வு அதிகரியினாலேயே ஒருங்கிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு, ஏற்கனவே மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரியபட்ட தாக்குதல் முயற்சிகள்
ஐ.நா மனித உரிமை சபைக்கு வருகை தந்துள்ள சிறிலங்கா படையினரும், கபடமான பத்திரிகையாளரும், சில புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களை முடித்துகட்ட திட்டமிட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், என்னை முடித்துகட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. முதலாவதாக, 2013ஆம் ஆண்டு யூன் மாதம், பாரிஸில் எனது வசிப்பிடம் சூறையாடப்பட்டது.
இதே கால பகுதியில், ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவரலாய சாரதி ஒருவர், என்னுடன் உரையாடுவதற்காக ஆட்கள் நடமாட்டம் குறைந்த ஐ.நாவின் நூல் நிலைய பகுதிக்கு வருமாறு அழைத்தார்.
இதனது நோக்கம் ஐ.நாவிற்குள் வைத்தே என்னை தாக்குவது. இவற்றை தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பாரிஸ் தொடருந்தில் இரவு வேளை பயணம் செய்து கொண்டிருக்கையில், சிறிலங்காவை சார்ந்த இனம் தெரியாத நபர் ஒருவர், தன்னை பாரிஸில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயம்,
என்னை பாரிஸில் லாச்சப்பல் என்ற இடத்தில் வைத்து முடித்து கட்ட ஏவியதாகவும், தான் அதை செய்ய விரும்பவில்லையெனவும் கூறினார்.
இவற்றிற்கு மேலாக இன்னுமொரு சம்பவம் பாரீஸில் இடம் பெற்றது. தமிழ் பத்திரிகையாளரென கூறப்படும் ஒரு நபர், 2010ம் ஆண்டின் பின்னர், சில தடவைகள் ஐ.நா மனித உரிமை சபை அமர்வுகளில் கலந்து கொண்டார். சிறிலங்கா அரசு இவரை திடீரென ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்தின் தகவல் உத்தியோகத்தராக நியமித்தார்கள்.
இவர் எதிர்பாராத விதமாக, 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி, ஓர் பிரெஞ்சு கை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார். தான் தற்பொழுது, பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகவும், தன்னை பாரிஸில் என்னை சந்திக்குமாறு கேட்டு கொண்டார்.
உடனடியாக, நீங்கள் சிறிலங்காவின் ஜேர்மன் தூதுவராலயத்தில் கடமையாற்றியதை எப்பொழுது எதற்காக விட்டீர்களென வினாவிய பொழுது – அவர்கள் தன்னை தமிழீழ விடுதலை புலியின் ஆளாக பார்பதனால், அவர்களுடன் வேலை செய்வது கடினமென கூறினார்.
இவரது பதில் மிகவும் வியப்பாக இருந்த காரணத்தினால், நீங்கள் எதை வேண்டுமானாலும் தொலைபேசியில் கதைத்து கொள்ளுங்கள், உங்களை என்னால் பாரிஸில் சந்திக்க முடியாது என்பதை அறுத்து உறுத்து கூறினேன்.
இச்சம்பம் நடைபெற்று சரியாக ஒருவருடம் ஆவதற்குள், இதே நபர் கொழும்பில் ஒர் தமிழ் பத்திரிகையை நடத்துவதாக அறிந்தேன். உண்மையை பேசுவதனால், இவ் நபருக்கு பத்திரிகை நடத்துவதற்கு பெரும் தொகையான பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலை புலியின் ஆளாக பார்க்கப்பட்ட ஒருவர் கொழும்பில் எப்படியாக நிம்மதியாக வாழுகிறார் என்பதே தற்போதைய வினா.
இவையாவும் கண்முன் காணப்பட்ட அனுபவிக்கப்பட்ட உணரப்பட்ட சம்பவங்கள். இவற்றுக்குள் எந்தனை எம்மால் உணரப்படாதவை என்பதுடன், இன்னும் எவற்றை எப்பொழுது சந்திக்க வேண்டியுள்ளது என்பதே தற்போதைய வினா. எது என்னவானலும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அடிவணக்காது, வழமை போல் மனித உரிமை வேலைகளுடன், யாதர்தங்கள் உண்மைகள் அடங்கிய கட்டுரைகள் எழுதுவேன் தொடர்ந்து பிரசுரிப்பேன்.
யுத்தம் மிக ஊக்கிரமாக நடந்த 2008, 2009ம் ஆண்டுகளில், வன்னி பிரதேசங்களில், முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் பொது மக்களே வாழுகிறார்களென சிறிலங்கா அரசினால் உலகிற்கு முழு பொய் கூறப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர், ஏறக்குறைய மூன்று லட்சத்து எண்பதினாயிரம் பொதுமக்கள் சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்ததை சர்வதேசம் கண்டு வியந்தது. ஆனால் அவர்களால் அன்று ஒன்றும் செய்ய முடியவில்லை.
இன்றும் சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்கு மிகவும் மோசமான பொய்களை கூறி காலத்தை கடத்துகின்றனர். இன்றும் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.
பொதுமக்கள் புகைபடம் பிடிக்கப்பட்டார்கள்
2009ஆம் ஆண்டு மே மாதத்தில், வன்னியிலிருந்து சிறிலங்கா பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேளையில், யாவருக்கும் அவர்களது தகவல்கள் அடங்கிய பலகை ஒன்று, அவர்களது உடம்பில் இணைக்கப்பட்டு, சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளினால் புகைப்படம் எடுக்கப்பட்டார்கள்.
அவ் பலகைகளில் அவர்களது விடுதலை திகதி, அக் குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள் என்ற விபரங்களுடன், அவர்களிற்கான அடையாள இலக்கமும் காணப்பட்டது.
இவ்விதமான நடைமுறை, ஜெர்மனியில், கிட்லரின் நாஸி படைகளிடம் சரணடைந்த யூதர்களிற்கு நடந்தது என்பது சரித்திரம். அப்படியானால் சர்வதிகாரி மகிந்த ராஜபக்சாவும் ஓர் ஹிட்லர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அம்பாறை மாவட்டத்தில், அடர்த்தியான காட்டு பகுதியில், கிரீந்தலை எனும் இராணுவ முகம் உள்ளது. இங்கு யார் உள்ளார்கள் என்பதை அறிவதில் பலர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார்கள். காரணம், இங்கு தமிழீழ விடுதலை புலிகளின், ஏறக்குறைய நானுறு போராளிகள் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
அவ் நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை, சிறிலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கோ அல்லது மிகவும் அண்மை காலமாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐ.நா நிபுணர்கள் யாருக்காவது கூறியுள்ளார்களா? கிரீந்தலை முகாமில் இவர்கள் எவ் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை நல்லாட்சி என கூறப்படும் பொய்யாச்சியினால் வெளியிட முடியுமா? இவர்களது பெயர்கள் தடுத்து நிறுத்தப்பட்டவர் பட்டியலிலோ அல்லது காணமல் போனோர் பட்டியலிலோ சேர்க்கப்பட்டுள்ளதா?
எது என்னவானாலும், சிறிலங்கா மீது போர் குற்றமென வரும் வேளையில் – ஆயுதம் தாங்கிய படையினர் மட்டுமல்லாது, சிறிலங்காவிற்கு அவ்வேளையில் அறிவுரை கூறிய கல்விமான்கள், புத்திஜீவிகள், முன்னாள் ராஜதந்திரீகள், சர்வதேச பயங்கரவாத நிபுணர் எனப்படுவோரும் போர் குற்றச்சாட்டிற்கு பதில் கூறவேண்டியவர்கள். இப்படியான பெயர்வழிகள் எங்கு வசித்தாலும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுபவர்களே.
சிறிலங்காவில் நடந்தவை நடப்பவை யாவும், இஸ்ரேலியா நாட்டினது செயற்பாடுகளின் மறுபிரதிகளே. இஸ்ரேல் தமது நாட்டில் பாலாஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக என்னென்ன செய்கிறார்களோ, அதே வழிகளை தான் தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி சின்னாபின்மாக்குவதற்கு சிறிலங்காவும் இதனது பாதுகாப்பு அமைச்சும் கையாழுகிறது.
அது மட்டுமல்லாது, இஸ்ரேல் போன்று தற்பொழுது பௌத்த சிங்கள இராணுவ தலைவர்களும், அரசியல் தலைவர்களாக மாறி வருவதுடன், சிறிலங்காவின் ஜனதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கான வழிவகைகளை தேடுகிறார்கள்.
சிறிலங்காவில் மாறி மாறி ஆட்சி செய்யும் பௌத்த சிங்கள அரசுகளின் உண்மை நிலைகளை நாம் சுருக்கமாக கூறுவதனால், இத்தீவில் சகல இன மக்களும் சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் வாழகூடிய வழிகளை தவிர்த்து, சிங்கள பௌத்தம் தவிர்ந்த மற்றை இனத்தவர்களை, சமயத்தவர்களையும் அறவே அழிப்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள்.
நாம் யாதர்த்தம் உண்மையை பேசுவோமானால், இலங்கைதீவில் 2015ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்து அரசிற்கு, பாரளுமன்றத்தில் திருப்தியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்லாது, அதே கட்சியை சார்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியும் பதவியில் இருந்தார் என்பது சரித்திரம்.
ஆனால் இவர்கள் அரசியல் ரீதியாக ஏழு தசப்தங்களிற்கு மேலாக ஏற்பட்டு வரும் உயிர் உடமை இழப்புகளை அலட்சியம் பண்ணி, அங்கு ஓர் இனப்பிரச்சனையோ அல்லது அரசியல் பிரச்சினையோ இல்லை என்ற அடிப்படையிலேயே ஆட்சி செய்தார்கள்.
இவ் நிலையில், இன்று பாரளுமன்றத்தில் ஓர் அரைகுறை பெரும்பான்மையை கொண்ட தற்போதைய அரசு, அரசியல் தீர்விற்கும் பொறுப்பு கூறலிற்கு வழிவகை செய்வார்கள் என்பது பகற் கனவு. இவர்கள் யாவருடைய உண்மையான நோக்கம், தமது நான்கு தூண் திட்டம் ஒழுங்காக நிறைவேற்றப்படும் வரை, காலம் நேரத்தை கடத்துவதே. இதற்கு ஏற்றவாறு சகல தமிழ் கட்சிகளும் நேரடியகவோ மறைமுகமாகவோ தாளம் போடுகின்றன.
தற்பொழுது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடப்பவை யாவும், நன்றாக திட்டமிடப்பட்டு சர்வதேச சமூதாயத்தின் குறியை நோக்கங்கள் திசை திருப்புவதாகவே காணப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கபடும் நம்பிக்கை இல்லா பிரேரணைகள், ஆளும் கட்சிகளிற்குள் பிரச்சினைகள் என்பவை யாவும் சோடிக்கப்பட்ட விடயங்களே.
முன்பு பல கட்டுரைகளில் என்னால் கூறப்பட்டது போன்று 1948ஆம் ஆண்டு முதல் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது நன்றாக சவாரி செய்தார்கள். தற்பொழுது சர்வதேச சமுதாயம் மீது தமது சவாரியை ஆரம்பித்துள்ளார்கள்.
ஓர் தமிழ் திரைப்பட பாடலின் சில வரிகளை இங்கு கூற விரும்புகிறேன். “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை தமிழர் உடமையடா, ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா”
இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் எமது செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.