தமிழ் தேசிய இனத்தின் உரிமைப்போரில் ஆரம்பம் முதல் இறுதி யுத்தம் வரை உயிர் நீத்த அனைத்து உறவுகளையும், தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய அனைத்து விடுதலை இயக்க போராளிகளையும் எமது நெஞ்சில் நினைவேந்தி அவர்களது நெடுங்கனவை வென்றெடுக்க நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீதியான எமது ஆரம்பகால உரிமைப்போராட்டத்தில் எம்மை நாமே அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக்கொண்டது எமது இனம் வீழ்ந்து போவதற்காக அல்ல. வலிகளும், வதைகளும் சுமந்து, குருதியில் சரிந்து வகை தொகையின்றி எமது இனம் அழிந்து போவதற்காகவும் அல்ல.
மாறாக, எமது மக்கள் எமது சொந்த மண்ணில் உரிமையோடு முகமுயர்த்தி வாழ்வதற்காகவே நாம் போராடப்புறப்பட்டவர்கள். அதற்காக நாம் ஒரு மாபெரும் சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே நீதியான பாதையில் வழி நடத்தி சென்றவர்கள்.
எமது ஆரம்ப கால உரிமைப் போரில் நாமும் எம்மோடு கூட இருந்த எம் பாசமிகு தோழர்களை களமுனையில் இழந்திருக்கிறோம்.
விரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும் பறக்கும் திசை ஒன்றுதான் என்ற உன்னத நோக்கில் பல்வேறு இயக்கங்களும் அன்று களத்தில் நின்று மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியிருந்தன.
ஆனாலும், ஒரு தாய் பெற்ற பிள்ளைகளான நாம் திசைக்கொன்றாக சிதறி நின்று எமக்குள் நாமே மோதிக்கொண்டதாலும்.இதனால் எமது நீதியான உரிமைப்போராட்டம் ஒருமித்த பலமின்றி அழிவு யுத்தமாக மாறிச்செல்ல தொடங்கியதாலும் மாறி வந்த உலக அரசியல் ஒழுங்கை கருத்தில் எடுத்து, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் எமது உரிமைப்போராட்ட பாதையில் இருந்து தீர்கதரிசனமாக சந்தி பிரித்து செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டோம்.
பாதைகள் மாறினாலும்,.. எமது இலட்சிய பயணம் நின்றதில்லை. தொடர்ந்தும் யதார்த்த அரசியல் வழிமுறையில் நின்று, ஜனநாயாக வழிமுறையில் நாம் எமது மக்களின் இலட்சிய கனவுகளுக்காக வாதாடியும் போராடியும் வருகின்றோம்.
எமது மக்களுக்கான ஜனநாயக வழிமுறை பயணத்திலும் எமது தோழர்கள் பலரையும் இழந்திருக்கிறோம். அது போல் சக கட்சிகளின் தோழர்களும் தமது இன்னுயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.
தலைமைகள் முரண்பட்டு நின்றாலும் எமது தாயக தேச விடுதலைக்காக போராடி மரணித்த அனைத்து போராளிகளும் நாம் நேசிக்கும் எமது தமிழ் பேசும் மக்களின் பிள்ளைகளே!.
ஆகவே, அனைத்து விடுதலை அமைப்புகளில் இருந்தும் ஆகுதி ஆகிப்போன சகல விடுதலை இயக்க போராளிகளையும் நாம் மரியாதை செலுத்தி வணங்குகின்றோம்.
அதேவேளை, சகோதர இயக்க முரண்பாடுகளாலும், உள்ளியக்க முரண்பாடுகளாலும் பலியாகிப்போன சகல இயக்க போராளிகளுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.
எமது உரிமைப்போரில் உயிர்நீத்த எமது தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகிறோம்.
பலியாகிப்போன எமது உறவுகளை நினைவு கூற ஓர் பொது தினமும் அவர்களுக்கு மரியாதை செலுத்த ஓர் நினைவு சதுக்கமும் வேண்டும் என நான் நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறேன். விரைவில் அது நடைமுறைக்கு வரும்.
உறவுகளை பலி கொடுத்த வலியை சுமக்கும் மக்களில் நானும் ஒருவன். எனது நெருக்கமான உறவுகளை மட்டுமன்றி என்னுடன் கூட இருந்தவர்களையும் உரிமைப்போராட்டத்தில் பலி கொடுத்த இழப்பின் துயரங்களை நானும் அனுபவிப்பவன்.
அந்த அனுபவங்களுக்கு ஊடாகவே உரிமையை வெல்வதற்கான எமது பாதையை நாம் செப்பனிட்டுக்கொண்டவர்கள். பலியாகிப்போன அனைத்து உறவுகளுக்கும் அனைத்து இயக்க போராளிகளுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது, இழப்புகளை சொல்லி அழுது கொண்டிருப்பதல்ல.
இழப்புகளை வைத்து அரசியல் நடத்துவதும் அல்ல,.மாறாக,. உறவுகளை பறி கொடுத்து வலி சுமந்த எமது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதே ஆகும்.
தேசம் சிந்திய இரத்தத்தியாகங்கள் வெறும் தேர்தல் வெற்றிக்கானது அல்ல. எந்த இலட்சியத்திற்காக எமது மக்களும் சகல போராளிகளும் பலியாகிப்போனார்களோ அந்த இலட்சியங்களை எட்டும் நெடுங்கனவை நாம் வென்றெடுப்பதே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.