ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு துவங்கி, ஆடியோ விழா முடிந்து, ஜூன் 7-ம் தேதி ரிலீஸுக்கும் ரெடியாக இருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் தனுஷ் குஷியில் குதிக்கிறார். மும்பையில் ஷூட்டிங் ஆரம்பித்த நாள்களில் இருந்து எப்போது என்னமாதிரி கேரக்டரில் ரஞ்சித் தன்னை நடிக்க அழைப்பார் என ஆவலோடு காத்திருந்தார், தனுஷ்.
தனுஷூம், சமுத்திரக்கனியும் கலந்துகொண்ட திரைப்பட விழா ஒன்றில், ‘சமுத்திரக்கனியைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ‘காலா’வில் எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்கிறதுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று பகிரங்கமாகவே தனது விருப்பத்தை வெளியிட்டவர், தனுஷ். ஆனால், தனுஷ் ஆசை ஏனோ நிறைவேறவில்லை. என்னதான் நடந்தது என்பது குறித்து முக்கியமான சிலரிடம் பேசினோம்.
ரஞ்சித் ‘கபாலி’ படத்துக்கு ரஜினியுடன் நடிக்கவிருந்த நட்சத்திரங்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ரஜினி தலையிடவே இல்லை. இசை, ஒளிப்பதிவு, பாடல்கள், ஹீரோயின் என அனைத்தையுமே ரஞ்சித் விருப்பத்துக்கே விட்டுவிட்டார். அடுத்து, ‘காலா’ படத்துக்கான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும்போது, ‘கபாலி படத்தில் இடம்பெற்ற டெக்னீஷியன்கள் தவிர நட்சத்திரங்கள் யாரும் வேண்டாம் என முடிவெடுத்தனர்.
‘காலா’வில் நடித்திருக்கும் ஈஸ்வரிராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், சம்பத், திலீபன் உட்பட அனைத்து நட்சத்திரங்களையும் தேர்வுசெய்யும் பொறுப்பை ரஞ்சித்திடமே விட்டுவிட்டனர். ‘கபாலி’யில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சீன நடிகரின் நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை. அதுபோல், ‘காலா’வில் நடிக்கும் வில்லன் வேடம் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார், ரஞ்சித். ‘காலா’வின் கதை மும்பை தாராவியில் நடப்பதுபோல் அமைந்திருப்பதால், வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நானா படேகரைத் தேர்வு செய்தனர்.
ஆரம்பத்தில் ‘நோ’ சொன்ன நானா, அதன்பின் ரஜினி போனில் பேசியபிறகே, ‘காலா’வில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்திப் படத்தில் நடிக்கவே ஆயிரம்முறை யோசிக்கும் நானா, திடீரென நேரடித் தமிழ்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதைப் பலரும் ஆச்சர்யமாகவே பார்த்தனர். “அண்ணன் சொன்னதால, ‘காலா’வில் நடிக்கிறேன்” எனச் சொல்வாராம், நானா.
‘காலா’வில் ரஜினிக்கு மூன்று மகன்கள். ஏதாவது ஒரு மகன் வேடத்தில் நடிப்பதற்கு நிச்சயமாய் தன்னை ரஞ்சித் அழைப்பார் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார், தனுஷ். தனுஷை நடிக்கவைக்கும்முன் ரஜினியிடம் ஓகே வாங்கிக்கொள்வது நல்லது என்று, தனுஷ் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் விஷயத்தை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார், ரஞ்சித். நீ….ண்டநேரம் யோசித்த ரஜினி, ‘தனுஷ் தயாரிப்பாளரா மட்டும் இருக்கட்டும். நடிக்க வேணாமே!’ என்று நாசூக்காக தவிர்த்துவிட்டாராம்.
தனுஷைத் தவிர்த்த ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்ற கேள்வி, சினிமா பிரபலங்கள் எல்லோரிடமும் தொக்கி நிற்கிறது. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையில் ரஜினியின் கதாபாத்திரம் சவாலானது. அந்த சவாலை விஜய் சேதுபதியுடன் பகிர்ந்துகொள்ளும்போது, இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெரும் என்பதை சரியாகக் கணித்தே இந்த முடிவுக்கு ஓகே சொல்லியிருக்கிறார், ரஜினி. ஒரு ரசிகனாக ரஜினியிடம் கவர்ந்த அத்தனை விஷயங்களையும் கலந்துகட்டி திரைக்கதை அமைத்து வருகிறார், கார்த்திக் சுப்புராஜ். ஆக, ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கன்ஃபார்ம்!