நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?..

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல அது திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.

நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.

வேத் பூஷன் தனியார் துப்பறியும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது என்கிறார் வேத் பூஷன்.

ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம் என்று வேத் கூறியுள்ளார்.

துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் பொலிஸ் அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம் என்கிறார் வேத்.

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள் என்று வேத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 11ம் திகதி தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.