வருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு! 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தாயொருவர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகோரிய யுத்தத்தின் 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தாயக பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தினரினதும், வடக்கு மாகாண சபையினதும் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவரின் வீர பேச்சு அங்கு வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த தாய் அங்கு கருத்து தெரிவிக்கும்போது,
எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டு வருவார், அவரது பிள்ளைகள் அனைவரும் அணி அணியாய் திரண்டு வருவார்கள்.
நான் என்னுடைய மனசாட்சிக்குத் தவிர இலங்கையின் இராணுவத்தினருக்கும், பொலிஸூக்கும் பயப்படமாட்டேன்.
என்னுடைய ஒரே ஒரு பிள்ளை, யுத்தம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கொண்டு சென்றார்கள், இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை, ஆனால் எங்களுடைய அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவார், அவரை இறைவனின் சக்தியும், நீதியின் சக்தியும் சேர்ந்து மீட்டு கொண்டுவரும்.
எங்கள் அண்ணன் வீறுநடைபோட்டு மீண்டும் வருவார், அவரின் பின்னால் எங்களது பிள்ளைகள் அணி அணியாய் திரண்டு வருவர். கடவுளால் பிரபாகரனுக்கு முடிசூட்டப்படும் என உறுதிக்குரலில் தெரிவித்துள்ளார்.