கொழும்பில் தீயில் எரிந்த புலிக் கொடி!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை குறித்த இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து, தீயிட்டு எரித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போராடிவருவோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.