ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினர் இனப்படுகொலை செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டமையால் எம்பிலிப்பிட்டிய நகர சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றபோது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெண் உறுப்பினரான லசந்தி லக்மினி மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினர் பொதுமக்களை படுகொலை செய்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விசேட பிரேரணையொன்று இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நகர சபையில் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட லசந்தி லக்மினி எனும் பெண் உறுப்பினர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பொதுமக்களை படுகொலை செய்திருப்பதாக கூறப்படுவது உண்மையே.
அந்த வகையில் அங்குள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட வேண்டும்.
புலிகள் மட்டுமன்றி ஜே.வி.பியினரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது ஜனநாயக அரசியலில் ஈடுபடுகின்றனர்.
அதுபோன்றதொரு வாய்ப்பு புலிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லசந்தி லக்மினியின் இக்கருத்துக்கு ஜே.வி.பி. உறுப்பினர் உட்பட ஒட்டுமொத்த நகர சபை உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, அவரது கருத்தை வாபஸ் பெற வலியுறுத்திய போதிலும் அவர் கடைசி வரை தன் கருத்தை வாபஸ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.